பொள்ளாச்சியில் ஆட்டோ ஓட்டுநரை கடித்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர்

 
pollachi

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அம்பராம்பாளையம் பகுதியில் மினி ஆட்டோ ஓட்டுநருடன் ரகளையில் ஈடுபட்டு கடித்து வைத்த ஊராட்சி தலைவரின் கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 கோவை மாவட்டம் பொள்ளாச்சி அம்பராம்பாளையம் ஊராட்சியை சேர்ந்தவர் பைசில். இவர் கோவை தெற்கு மாவட்ட திமுக சிறுபான்மை இணைச் செயலாளராக உள்ளார். இவரது மனைவி அம்பராம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு மது போதையில் இருந்த பைசில் அம்பராம்பாளையம் தனியார் மருத்துவமனை அருகே உள்ள காலியிடத்தில் நின்றிருந்த இளையராஜா என்பவரது மினி ஆட்டோ சக்கரத்தில் காற்றை பிடிங்கி விட்டுள்ளார்.

இதையடுத்து அருகில் உள்ள ஆட்டோ ஸ்டேண்ட் டில் இருந்து வந்த இளையராஜா எதற்காக வண்டியில் காற்றை திறந்து விட்டீர்கள் என கேட்டபோது, அவரை தகாத வார்த்தைகள் திட்டி பலமாக தாக்கியுள்ளார். மேலும் நெஞ்சு பகுதியில் கடித்து காயப்படுத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த இளையராஜா பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து இளையராஜா ஆனைமலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் பைசல் மீது பொது இடத்தில் வைத்து கொலை மிரட்டல் விடுத்து தாக்கி காயப்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பொள்ளாச்சி கிளைச் சிறையில் அடைத்தனர்.