நிகழ்ச்சியில் பங்கேற்றது தவிர இதில் ஆளுநருக்கு எந்த பங்கும் இல்லை- ஆளுநரின் ஆலோசகர்

 
ல்

ஆளுநர் ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து அவமதிக்கப்பட்ட விவகாரத்தில், நிகழ்ச்சியில் பங்கேற்றது தவிர இதில் ஆளுநருக்கு எந்த பங்கும் இல்லை என ஆளுநரின் ஆலோசகர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்த்தாய் வாழ்த்தில் விடுபட்ட’திராவிட நல்திருநாடு’... ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் சர்ச்சை


சென்னை டிடி தமிழ் டிவியில் நடைபெற்றுவரும் இந்தி மாத கொண்டாட்ட விழாவின்போது தமிழ்த் தாய் அவமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற அந்த விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்தில், "தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல்திருநாடும்" என்ற வரியை விடுத்து பாடப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.



இந்நிலையில்,  ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஆலோசகர் திருஞானசம்பந்தம் தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னை, தூர்தர்ஷன் ஏற்பாடு செய்திருந்த, சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற, இந்தி மாத நிறைவு விழா மற்றும் தூர்தர்ஷன் சென்னை பொன்விழா நினைவேந்தல் விழாவில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடும் குழுவினர், “திராவிட” என்ற சொல்லைக் கொண்ட ஒரு வரியை கவனக்குறைவாகத் தவறவிட்டனர். இச்சம்பவம் குறித்து உடனடியாக ஏற்பாட்டாளர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உரிய அதிகாரிகள்  இவ்விவகாரத்தைக் கவனிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். நிகழ்ச்சியில் பங்கேற்றார் என்பதைத் தவிர ஆளுநருக்கோ அல்லது அவரது அலுவலகத்திற்கோ இதில் எந்தப் பங்கும் இல்லை. ஆளுநர் தமிழ் மற்றும் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகள் மீது மிகுந்த மரியாதை கொண்டவர்” எனக் குறிப்பிட்டுள்ளார்.