புதுக்கோட்டையில் தொடங்கியது இந்தாண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு!
நடப்பாண்டின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் கோலாகலமாக தொடங்கியது, ஜல்லிக்கட்டை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், ஆட்சியர் அருணா திமுக வடக்கு மாவட்ட செயலாளர் செல்லப்பாண்டி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
தமிழ்நாட்டிலேயே அதிகப்படியான வாடிவாசலை கொண்ட மாவட்டம் புதுக்கோட்டை. இம்மாவட்டத்தில் தான் அதிகப்படியான ஜல்லிக்கட்டு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதுமட்டுமின்றி ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் தான் நடைபெறுவது வழக்கம். அதன்படி நடப்பாண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் புனித விண்ணேற்பு அன்னை ஆலைய புத்தாண்டு மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு கோலாகலமாக தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன், மாவட்ட ஆட்சியர் அருணா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
ஜல்லிக்கட்டு தொடங்குவதற்கு முன் ஜல்லிக்கட்டு உறுதி மொழியை ஆட்சியர் அருணா வாசிக்க காளையர்கள் உள்ளிட்ட அனைவரும் எடுத்துக்கொண்டனர். மேலும் போட்டியில் பங்கேற்கும் காளைகள் அழிக்கப்படுவதற்கு முன்பு புனித விண்ணேற்பு அன்னை ஆலய அருட்தந்தை அருளானந்த் வாடிவாசலுக்கு முன்பு நின்று பிரார்த்தனை செய்த நிலையில் மேளதாளங்கள் முழங்க வாடிவாசலுக்கு கொண்டுவரப்பட்ட கோயில் காளைகள் அவிழ்க்கப்பட்டது. மேலும் இந்த ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து அழைத்து வரப்பட்ட 750 காளைகள் 300 காளையர்கள் பங்கேற்றுள்ள நிலையில் ஒரு சுற்றுக்கு 50 வீரர்கள் வீதம் 6 சுற்றுகளாக இந்த ஜல்லிக்கட்டை நடைபெற்ற வருகிறது.
வாடிவாசலிலிருந்து ஒன்றன் பின் ஒன்றாக காளைகள் அவிழ்க்கப்பட்டு வரக்கூடிய நிலையில் துள்ளிக்குதித்து சீறிப்பாய்ந்து ஆக்ரோசத்துடன் செல்லும் காளைகளை காளையர்கள் மல்லுக்கட்டி தீரத்துடன் தழுவியும் தழுவ முயன்றும் வருகின்றனர். மேலும் இந்த ஜல்லிக்கட்டில் 400க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரக்கூடிய நிலையில் சுகாதாரத்துறை கால்நடை பராமரிப்பு துறை வருவாய்த்துறை ஊரக வளர்ச்சித்துறை தீயணைப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை கண்காணிப்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வரக்கூடிய நிலையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த ஜல்லிக்கட்டை கண்டு ரசித்து வருகின்றனர்.
இந்த ஜல்லிக்கட்டு பங்கேற்றுள்ள அனைத்து காளைகளுக்கும் விழா குழு சார்பில் வேஸ்டி வழங்கப்பட்டு வரக்கூடிய நிலையில் சிறந்த முறையில் அதிக காளைகளைத் தழுவும் காளையர்களுக்கும் வீரர்களை திக்கு முக்காட செய்து களத்தில் நீண்ட நேரம் விளையாடும் காலையின் உரிமையாளருக்கும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு இருசக்கர வாகனங்கள் பரிசாக வழங்கப்பட உள்ளது.