கணவனை இழந்து 2 குழந்தைகளுடன் நடு தெருவில் நின்ற பெண்ணுக்கு நடத்துனர் பணி!

நீலகிரியின் முதல் பெண் நடத்துனராக கோத்தகிரியை சேர்ந்த சுகன்யா என்ற பெண் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள சோலூர்மட்டம் பகுதியை சேர்ந்தவர் சுகன்யா. இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கணவர் கருப்பசாமி கடந்த 2023-ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார். இவர் கோத்தகிரியில் அரசு போக்குவரத்துத்துறையில் நடத்துனராக பணியாற்றி வந்தார். பணியின் போது உயிழந்ததால் வறுமையில் வாடிய சுகன்யா, கருணை அடிப்படையில் அரசு வேலை கோரி தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
கணவர் உயிரிழந்து ஒரு வருடத்தில் போக்குவரத்து துறையில் நடத்துனர் பணி வழங்கி உத்தரவிட்டார். இந்த நிலையில் இன்று முதல் கோத்தகிரி மேட்டுப்பாளையம் வழி மார்க்கமாக இயக்கப்படும் அரசு பேருந்தின் நடத்துநராக பணியை துவங்கியுள்ளார். இவர் நீலகிரி மாவட்டத்தில் முதல் பெண் நடத்துனராவார். தனக்கு பணி வழங்கியதற்கு தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் போக்குவரத்து அமைச்சருக்கு நன்றியை தெரிவித்தார்.