"எங்க கடைக்கு வாங்க..." கடை வாசலில் நின்று பெண்களிடம் அத்துமீறும் ஊழியர்கள்

 
சிசிடிவி

கோவை பெரிய கடை வீதி பகுதியில் கையைப் பிடித்து இழுத்து தங்கள் கடையில் பொருட்கள் வாங்குங்கள் எனக் கூறும் இளைஞர்களால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வரும் நிலையில் அது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.

கோவை டவுன்ஹால் பெரிய கடை வீதி பகுதியில் ஏராளமான நகை கடை மற்றும் ஜவுளிக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.இந்த நிலையில் அங்கு பொருட்கள் வாங்குவதற்காக வரும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் கடை உரிமையாளர்கள் பல்வேறு வகையான தள்ளுபடிகளை வழங்கி வருகின்றனர். மேலும் வாடிக்கையாளர்களை தங்கள் கடைக்கு அழைத்து வருமாறு கமிஷன் அடிப்படையில் இளைஞர்களையும் நியமித்துள்ளனர்.அந்த இளைஞர்கள் அவ்வழியே நடந்து செல்லும் பென்களை கையைப் பிடித்து இழுத்து தங்கள் கடையில் பொருட்கள் வாங்குமாறு கூறுவது வாடிக்கையாகி வருகிறது. இதனால்  நடந்து செல்லும் பெண்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி வரும் சூழலில் அங்குள்ள துணிக்கடை ஒன்றின் முன்பாக நிற்கும் கமிஷன் இளைஞர்கள் நடந்து செல்லும் பெண்களை குறி வைத்து தங்கள் கடைக்கு வருமாறு வலுக்கட்டாயமாக அழைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியிருந்தது. 

இதனிடையே அப்படி அழைத்து கடைக்குள் விட்ட வாடிக்கையாளர் ஒருவர் துணி வாங்கி சென்ற விலையில் அதற்குரிய கமிஷனை கேட்டதில் கடை ஊழியரான பெண் ஒருவருக்கும் வாடிக்கையாளரை கையைப் பிடித்து இழுத்து கடைக்குள் அழைத்துச் சென்ற இளைஞருக்கும் இடையே கமிஷன் வழங்குவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவரும் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இது குறித்து கோவை போத்தனூரைச் சேர்ந்த துணிக்கடை ஊழியரான மேரி என்ற பெண் கடைவீதி காவல்நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் அடிதடி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இருவரும் அடித்துக்கொள்ளும் சிசிடிவி காட்சி தற்போது சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்ட பொதுமக்கள் பலரும் நடந்து செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கும் கோவை கடைவீதி பகுதி கமிஷன் இளைஞர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர்.