அரசுப் பள்ளியில் தீடீரென வெடித்த கம்ப்யூட்டர்! 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் மயக்கம்
அரியலூர் மாவட்டம் தேளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் திடீரென கணினி வெடித்த விபத்தில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் மயக்கம் அடைந்தனர்.
அரியலூர் மாவட்டம் தேளூர் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இதில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை 101 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் கணினி அறையில் ஒரு கணினி மட்டும் 24 மணி நேரம் செயல்படும் அளவில் இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது திடீரென கணினியானது பழுதாகி கணினி அறை முழுவதும் புகைமூட்டமாக காணப்பட்டது. இதனை கண்டு ஆசிரியர்கள் கணினி அறையை திறந்து பார்க்கும் பொழுது அருகாமையில் இருந்த பள்ளி மாணவர்கள் மீது புகையானது சூழ்ந்தது. இதில் அச்சமடைந்த மாணவர்கள் மயக்கம் அடைந்தனர்.
இதனை அடுத்து கயர்லாபாத் போலீசார் மற்றும் அரியலூர் தீயணைப்புதுறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பள்ளி மாணவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சை அனுப்பி வைத்து தீ விபத்து பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.