பிறந்து சில மணிநேரங்களேயான குழந்தையை சுடுகாட்டில் விட்டு சென்ற கொடூரம்
பண்ருட்டி அருகே சுடுகாட்டு பாதையில் பிறந்த சில மணி நேரமான ஆண் குழந்தையை வீசி சென்ற கொடூர செயல் அரங்கேறியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள ரெட்டிக்குப்பம் பகுதியில் சுடுகாடு பாதையில் குழந்தை ஒன்று எறும்புகள் மொய்க்க அழுத நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவ்வழியாகச் சென்ற சோனியா என்ற பெண் பொதுமக்கள் உதவியுடன் புதுப்பேட்டை போலீசருக்கு தகவல் கொடுத்தார். அதன்படி போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலமாக குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தை பிரிவிற்கு அனுப்பி உள்ளனர்.
10 நாட்கள் குழந்தை சிகிச்சை பெற்ற பின்பு கடலூர் குழந்தைகள் காப்பகம் மையத்தில் சேர்க்கப்படும் என்று மருத்துவர்கள் கூறினார். மேலும் குழந்தை குறித்து புதுப்பேட்டை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிறந்து ஒரு சில மணி நேரங்கள் ஆன நிலையில் ஆண் குழந்தையை வீசி சென்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.