பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 
stalin

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளார். 

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.  மார்ச் 1-ஆம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.  இதில் 60 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களும் ,அரசியல் தலைவர்கள் ,சினிமா பிரபலங்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.

stalin

அந்தவகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 9ஆம் தேதி கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் செலுத்திக் கொண்டார். இதைத்தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னை காவிரி மருத்துவமனையில் இரண்டாவது டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டார்.தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் உடனடியாக போட்டுக் கொள்ளவும், வேறு உடல் பாதிப்பு உள்ளவர்கள் எனில் மருத்துவரை அணுகி தடுப்பூசி எடுத்துக் கொள்ளவும் வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார்.

stalin

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே 2 தவணை தடுப்பூசி செலுத்தியிருந்த நிலையில் இன்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்.  இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், முன்களப் பணியாளர் என்ற முறையில் இன்று பூஸ்டர் டோஸ்  எடுத்துக் கொண்டேன்.அனைத்து முன்களப் பணியாளர்களும், இணை நோய்கள் கொண்ட 60 வயது நிரம்பிய மூத்த குடிமக்களும் தவறாமல் பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளுங்கள். தடுப்பூசி எனும் கவசத்தைக் கொண்டு நம்மையும் காப்போம்; நாட்டையும் காப்போம்! என்று பதிவிட்டுள்ளார். 


நேற்று முதல் தமிழகத்தில் மூன்றாவது தடுப்பூசி தவணையாக பூஸ்டர்  செலுத்தும் பணியை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக முன் களப்பணியாளர்கள்,  60 வயது கடந்தவர்கள் ஆகியோர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி கொள்ள தகுதியானவர்கள் என அறிவிக்கப்பட்டது.  இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள் அல்லது 39 வாரங்கள் நிறைவடைந்தவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு தகுதியுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.