செந்தில் பாலாஜியின் வேலையை அவரது தம்பி தான் செய்கிறார்- தங்கமணி

 
thangamani

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஓம் காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு தரிசனத்துக்கு வந்த குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும், முன்னாள் தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் தங்கமணி பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.

சமரசம் செய்த தங்கமணி - சமாதானம் ஆகாத செந்தில் பாலாஜி : நெருக்கடிக்கு ஆளான  எடப்பாடி! 

அப்போது பேசிய அவர், “இன்று காலை தமிழக மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீட்டை மதுபான கடை பார் உரிமையாளர்கள் முற்றுகையிட்டுள்ளனர். இவர்கள் பெரும்பாலும் திமுகவினர். இந்த போராட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக்கை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த திமுக ஆட்சியில் 6400 டெண்டர் மனுக்கள் மட்டுமே வந்ததாகவும், தற்போது 12 ஆயிரம் விருப்ப மனுக்கள் வந்துள்ளதாகவும் அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். கடந்த முறை அதிமுக ஆட்சியில் திறந்த முறையில் மனுக்கள் பெற்று பரிசோதனை செய்யப்பட்டது, ஆனால் இந்த முறை என்று எப்படி என்று உங்களுக்கே தெரியும். மேலும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் படிப்படியாக மதுபானக் கடைகள் மூடப்படும் என்று தெரிவித்தனர். ஆனால் தற்பொழுது உதாரணத்திற்காக பள்ளிபாளையம் நகரத்திலேயே இரண்டு மதுபான கடைகள் அதிகரித்துள்ளன. மேலும் சந்து கடைகளும் அதிகரித்துள்ளன. 

இதுகுறித்து திமுகவினரே என்னிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் பேச அனுமதித்தால், இந்த விவரத்தை தெரிவிப்பேன் என்றும், மேலும் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தன்னை சந்திக்க வரும் தொழிலதிபர்களிடம் தனக்கு வேலைப்பளு அதிகமாக உள்ளதால் என்னால் 40% மட்டுமே பணிகள் செய்ய முடிவதாகவும், மீதமுள்ள 60 சத பணிகள் எனது தம்பி அசோக் பார்த்துக்கொள்வார். அவரை பாருங்கள் என்று தொழில் அதிபர்களிடம் கூறிவருகிறார். மின்சாரத்துறை அமைச்சர் என்பது ஒரு பொறுப்பான பதவி ஆகும். ஆனால் அவர் தனது தம்பியை முன்னிறுத்தி பேசுகிறார். மின்சாரத்துறை என்பது மிகவும் பொறுப்பான துறை எனவே அத்துறையை தமிழக முதல்வர் தனது கவனத்தில் கொள்ள வேண்டும்” எனக் கூறினார்.