அரசு ஊழியர்கள் அதிமுகவை நம்பமாட்டர்கள்! திமுக பக்கம்தான் நிற்பார்கள்- தங்கம் தென்னரசு

 
ஆளுநரின் தேநீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார் - அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்...  

அரசு ஊழியர்களை ஒடுக்கிய கபட வேடதாரி பழனிசாமி, அரசு ஊழியர் நலன் பற்றி பேசலாமா? அரசு ஊழியர்கள் திமுக பக்கம்தான் நிற்பார்கள் என்பதை தேர்தல் வரலாறு சொல்லும் என நிதி மற்றும் சுற்றுசூழல் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

EPS criticising CM's tour to cover up AIADMK's corruption: Thennarasu

இதுதொடர்பாக அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசு ஊழியர்களின் கோரிக்கை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் வெளியிட்ட அறிக்கை ’மொட்டை’த் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவது போல இருக்கிறது. ’சசிகலா காலில் ஊர்ந்து சென்று முதல்வர் பதவி வாங்க முடியும்’ என அரசியலில் புதிய Thesis படைத்து Ph.D. பட்டம் பெற்ற பழனிசாமி  ’கபட வேடதாரி’ என்றெல்லாம் பேசலாமா?

அரசு ஊழியர் தொடர்பாகத் தி.மு.க. வெளியிட்ட விளக்க அறிக்கையை ‘மொட்டைக் காகித அறிக்கை’ எனச் சொல்லியிருக்கிறார் திரு. பழனிசாமி. மொட்டைக் காகித அறிக்கை என்றால், அதனை எப்படிப் பத்திரிகைகள் பிரசுரித்திருக்கும்? டிவி சேனல்கள் செய்தி வெளியிட்டிருக்கும்? என்ற அடிப்படைகூட தெரியாமல் ஒரு எதிர்க்கட்சித் தலைவர் இருப்பாரா? ‘மொட்டைக் காகித அறிக்கை’ என்றால் அது அ.தி.மு.க. என்பதுதானே உலக வரலாறு! ஜெயலலிதாவுக்குத் தெரியாமல் 2011-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிகளுக்கும் சேர்த்து ’மொட்டையாக’ வேட்பாளர் பட்டியல் வெளியானது; 2007-இல் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் 'எனக்குத் தெரியாமலேயே என் கட்சி எம்.எல்.ஏ-க்களும் எம்.பி-க்களும் வாக்களிக்கப் போனார்கள்’ என ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டது; டான்சி வழக்கில், 'ஆவணத்தில் உள்ளது என் கையெழுத்தே இல்லை’ என ஜெயலலிதா சொன்னது எல்லாம் அ.தி.மு.க அடித்த மொட்டைதானே!

eps vs thangam thennarasu

அனைத்துப் பிரிவு மக்களையும் அரவணைத்துச் செல்வதுதான் ஒரு அரசின் கடமை. அரசு ஊழியர்கள்கூட குடிமக்கள்தான். ஆனால், அவர்களை அ.தி.மு.க. என்றைக்குமே மதித்ததில்லை. ஆனால், எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளும்கட்சியாக இருந்தாலும் அரசு ஊழியர்களைக் கனிவாகவே தி.மு.க. நடத்தும்.  ஜெயலலிதா, பன்னீர்செல்வம், பழனிசாமி என யார் ஆட்சியில் இருந்தாலும் அ.தி.மு.க. ஆட்சியில் அரசு ஊழியர்கள் ஒடுக்கப்பட்டனர். அவர்களின் கோரிக்கைகள் உதாசீனப்படுத்தப்பட்டன. உரிமைக்காகப் போராடியவர்கள் மீது வழக்குகளும் துறைரீதியான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன என்பதுதான் கடந்தகால வரலாறு.

2001-இல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா 24-7- 2001 அன்று திருவல்லிக்கேணியில் நடைபெற்ற அரசு ஊழியர்கள் சங்கக் கட்டடத் திறப்பு விழாவில் பேசும்போது ‘’அரசின் வரி வருவாயில் 94 சதவிகிதம் அரசு ஊழியர்களுக்கே செலவாகிறது” என்று சொல்லி அரசு ஊழியர்கள் மீதான வெறுப்பை வெளிக்காட்டினார். அதோடு அரசு ஊழியர்கள் அனுபவித்து வந்த பல சலுகைகளை அதிரடியாகப் பறித்தார். அதனை எதிர்த்து அரசு ஊழியர்களும் ஆசிரியர்கள் 2003 ஜூலை 2-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தை முதலமைச்சர் ஜெயலலிதா அடக்குமுறையைப் பிரயோகித்து ஒடுக்கினார். போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களை விசாரணை நடத்தாமல் டிஸ்மிஸ் செய்யும் எஸ்மா சட்டத்தை 04-07-2003-இல் பிறப்பித்தார் ஜெயலலிதா. அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளை எல்லாம் நள்ளிரவில் வீடு தேடிப் போய்க் கைது செய்து சிறையில் அடைத்தனர். 200-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர் சங்கங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்தனர். ஒன்றரை இலட்சம் அரசு ஊழியர்களை ஒரே கையெழுத்தில் டிஸ்மிஸ் செய்தனர். ’ஸ்டிரைக் செய்ய மாட்டோம்’ என்ற உறுதிமொழியுடன் மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கிப் பலரை மீண்டும் வேலைக்குச் சேர்த்தார்கள். ’’கடமையைச் செய்யக் காத்திருக்கிறோம் அரசு ஊழியர்களுக்கு மறுவாழ்வு தாருங்கள்’’ என முதல்வர் ஜெயலலிதாவுக்குத் தலைமைச் செயலக ஊழியர் சங்கத் தலைவர் பாண்டுரங்கன் விடுத்த கோரிக்கையை எல்லாம் ஜெயலலிதா புறந்தள்ளினார்.

ஜெயலலிதாவுக்குக் கொஞ்சமும் சளைத்தவர் அல்ல பழனிசாமி. ஜெயலலிதாவின் வழித்தோன்றலான பழனிசாமிதான் முதலமைச்சராக இருந்தபோது தொடக்கப் பள்ளி ஆசிரியர் வாங்கும் சம்பளத்தைக் குறிப்பிட்டு ’’இவ்வளவு சம்பளமா?’’ என இழிவுபடுத்தினார். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் போராடிய அரசு ஊழியர்களையும் , ஆசிரியர்களையும் பார்த்து ’’அதிக சம்பளம் வாங்கும் நீங்கள் போராடலாமா?’’ என தனது வெறுப்பை வெளிப்படுத்தினார்.

உள்கட்சி அரசியல் குழப்பத்தால் இபிஎஸ் அரைகுறை அறிக்கை' - அமைச்சர் தங்கம்  தென்னரசு பதிலடி | Minister Thangam Thennarasu comments on EPS Statement -  hindutamil.in

பழனிசாமி ஆட்சியில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்து செய்ய வேண்டும், 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ 2019 ஜனவரியில் போராட்டத்தை நடத்தியது. அன்றைக்கு பணியாளர் நிர்வாகச் சீர்திருத்தத் துறைக்கு பொறுப்பு வகித்த அமைச்சர் ஜெயக்குமார் தனது வழக்கமான கேலி கிண்டல் பத்திரிகையாளர் சந்திப்பைப் போலவே அந்தப் போராட்டத்தையும் டீல் செய்தார். ’’கோரிக்கையை ஏற்க முடியாது. பணிக்குத் திரும்பாவிட்டால் நடவடிக்கை பாயும்’’ என்றெல்லாம் மிரட்டல் விடுத்தார். ’’அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தர, மக்களிடம் கூடுதல் வரி விதிக்க வேண்டி வரும்’’ எனக் காட்டமாகச் சொன்னார்.

அரசு ஊழியர் போராட்டம் நடந்து கொண்டிருந்த போது 2019 ஜனவரி 27-ஆம் தேதி அனைத்து நாளிதழ்களிலும் முக்கால் பக்கத்துக்கு அமைச்சர் ஜெயக்குமாரின் பெயரில் விளம்பரம் வெளியிட்டது பழனிசாமி அரசு. `பிற தனியார் நிறுவனத்தைக் காட்டிலும் அதிகச் சம்பளத்தை அரசு ஊழியர்கள் பெறுகின்றனர்' எனச் சொல்லி அரசு ஊழியர்களின் சம்பள விகிதத்தையும் அந்த விளம்பரத்தில் குறிப்பிட்டு அரசு ஊழியர்களை அவமானப்படுத்தியது யார்? ’தனியாரைவிட அரசு ஊழியர்கள் அதிகச் சம்பளம் வாங்குகிறார்கள் அவர்களுக்கு எதற்குப் போராட்டம்?’ என அந்த விளம்பரத்தில் கேள்வி எழுப்பியது எல்லாம் பச்சைப் பொய் பழனிசாமிக்கு மறந்துவிட்டதா? இந்த விளம்பரத்தை அனைத்து நாளிதழ்களிலும் அனைத்துப் பதிப்புகளிலும் அந்த விளம்பரத்தை வெளியிடுவதற்காக 50 லட்சம் ரூபாயைச் செலவழித்தனர். 

இதேபோலதான் அரசுப் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தத்தையும் ஒடுக்கியது பழனிசாமி அரசு. ஜாக்டோ-ஜியோ போராட்டத்தைப் போலவே பத்திரிகைகளில் விளம்பரம் வெளியிட்டது பழனிசாமி அரசு. அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு 13-ஆவது ஊதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்ட ஊதிய உயர்வு விவரங்களைத் தமிழ் நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடுவதற்காக அன்றைக்கு 46,54,361 ரூபாய் செலவிட்டனர்.

பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது செப்டம்பர் 7,
2017-ஆம் தேதி முதல் புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து, 7-வது ஊதியக் குழு பரிந்துரையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும்
9 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தினார்கள். அவர்களின் போராட்டத்தையும் கோரிக்கைகளையும் சிறிதும் மதிக்காமல் 85 ஆயிரம் பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்த அரசுதான் அ.தி.மு.க. அரசு. இப்போராட்டங்களுக்குப் பிறகுதான் அன்றைய அ.தி.மு.க. அரசு 7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியது. இன்று அதனைத் தனது சாதனையாக குறிப்பிடும் பழனிசாமி அவர்களின் உள்ளத்தில் உண்மை இருந்தால் அதைச் சொல்வதற்குக் கூசியிருக்க வேண்டும்.

அனைத்திற்கும் மேலாக 2016, 2017, 2019 ஆண்டுகளில் பல்வேறு கோரிக்கைகளுக்காகப் போராடிய அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் பழிவாங்கும் நோக்கில் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் மீது குற்றக் குறிப்பாணைகள் (17B), இடமாற்றம், பணியிடைநீக்கம், வழக்கு போன்ற ஒடுக்கு முறைகளை ஏவிய பழனிசாமி “எங்களது ஆட்சிக் காலத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டம் நடத்த முடியும்”  எனக் கூறுவது பச்சைப் பொய்யாகும். “கெட்டிக் காரன் புளுகு எட்டு நாளைக்கு” என்பார்கள் ஆனால் பழனிசாமி அடித்து விடுகின்ற பொய்கள் எட்டு நிமிடத்திற்குக் கூட தாங்காது.

ஆட்சியில் இருந்தபோது அரசு ஊழியர்களை ஒடுக்கிய பழனிசாமி இன்றைக்கு அரசு ஊழியர்களுக்காக அக்கறை நாடகம் நடத்துகிறார். ’’பிரதான எதிர்க்கட்சி என்பது ஒரு நிழல் அரசைப் போன்றது. அது சுட்டிக்காட்டும் குறைகளை, நேர்மையான ஆட்சியாளர்கள் ஏற்றுக்கொள்வார்கள்’ எனச் சொல்லியிருக்கிறார் பழனிசாமி. ஆட்சியில் இருந்தபோது Sadist Government போல ஆட்சி நடத்தி அரசு ஊழியர்களை ஒடுக்கியவர்கள் இப்போது நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள்.

நான் யாரையும் நேரடியாக சொல்ல விரும்பவில்லை” - இலங்கை மலையகத் தமிழர் விழா  குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு | Minister Thangam Thennarasu on the Sri  Lankan ...

அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாரால், எப்போது  திரும்பப் பெறப்பட்டது  என்பதை அரசு ஊழியர்கள் அறியாதவர்கள் இல்லை. 2021-ஆம் ஆண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு பதவியேற்றவுடன் 13.10.2021 அன்று வெளியிட்ட அரசாணையில் முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் திரும்பப் பெறப்பட்டன.

அ.தி.மு.க. ஆட்சியில் அரசு ஊழியர்கள் மீது நிகழ்த்தப்பட்ட ஒடுக்குமுறைகளை நீக்கிய அரசு திராவிட மாடல் அரசு. மேலும் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் வழியில் செயல்படும் இந்த அரசு அரசு ஊழியர்களுக்கு ஆதரவாகச் செயல்படும் கடமையை என்றும் கைவிட்டதில்லை. அரசு ஊழியர்களுக்கும் தி.மு.க.விற்கும் இடையிலான உறவு மிகவும் வலிமையானதாகும். அதில் பிளவு ஏற்படுத்தலாம் என பகற்கனவு காணும் பழனிசாமியின் மீது அனுதாபம் கொள்ளலாமே தவிர வேறெதுவும் சொல்வதற்கில்லை.

தொடர்ந்து அரசு வேலைவாய்ப்புகளை அதிகமாக உருவாக்கி இளைஞர்களுக்கு வழிகாட்டும் அரசாக விளங்கும் இந்த அரசு, அரசு ஊழியர்களின் நலனைப் பாதுகாத்தும் அவர்கள் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலித்து நடைமுறைப்படுத்தியும் வருகின்றது. அதற்குச் சாட்சியமாய் விளங்குவதுதான் தொடர்ந்து தேர்தல்களில் மக்கள் தி.மு.க.விற்கு அளித்து வரும் வெற்றிகள்.

’கபட வேடதாரி’ பழனிசாமியையும் அ.தி.மு.க.வையும் அரசு ஊழியர்கள் நம்ப மாட்டார்கள். அரசு ஊழியர்கள் பக்கம் நிற்பதும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தி.மு.க.தான் என்பதை அரசு ஊழியர்கள் அறிவார்கள். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான வெறுப்பு அ.தி.மு.க.வின் உதிரத்திலேயே ஊறியிருக்கிறது என்பதை அரசு ஊழியர்கள் அறியாதவர்கள் அல்லர். இந்த உண்மைகளை மறைத்து விட்டுப் பழனிசாமி இன்று வடிக்கும் முதலைக்கண்ணீரைப் பார்த்தால் முதலையே தோற்றுவிடும் போலிருக்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.