ஜன.27 முதல் விஜய் சுற்றுப்பயணம்- தாடி பாலாஜி

 
ஜன.27 முதல் விஜய் சுற்றுப்பயணம்- தாடி பாலாஜி

கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்திலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டி உள்ளது. இந்த நிலையில் ஆவடி அருகே திருமுல்லைவாயில் ஜெயா நகர் நரிக்குறவர் பகுதிக்கு சென்ற நடிகர் தாடி பாலாஜி நரிக்குறவர் மக்களுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அங்குள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு படிப்பு உபகரணங்கள், குடை மற்றும் அனைவருக்கும் பிரியாணி பரிமாறப்பட்டது. முன்னதாக தங்கள் பகுதிக்கு வந்த நடிகர் தாடி பாலாஜிக்கு உற்சாக வரவேற்பு அளித்ததோடு ஊசிமணி, பாசிமணி போன்றவற்றை அணிவித்து மகிழ்ச்சியோடு செல்பி எடுத்துக் கொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் தாடி பாலாஜி, “தளபதிக்காக எப்போது வேணாலும் எங்கே வேண்டுமானாலும் செல்ல தயாராக இருப்பேன். தளபதிக்காக உயிர் உள்ளவரை உழைத்துக் கொண்டே இருப்பேன். இந்த நிகழ்ச்சிக்கு எப்படி அனுமதி கொடுத்தார்கள் என தெரியவில்லை, மக்களுக்கு ஒரு நல்லது செய்வதற்கே அனுமதி மறுக்கப்படுகிறது. தற்போது ஆந்திராவில் அல்லு அர்ஜுன் நடிகருக்கு எவ்வளவு பிரச்சனை வந்தது. நீங்கள் பார்த்தீர்கள். புஷ்பா - 2 என கூறுகிறார்கள். ஆனால் அல்லு அர்ஜுன் தினமும் புஸ் என செல்கிறார். ஒரு படம் பார்க்க அவ்வளவு கூட்டம் வரத்தான் செய்யும். தொடர்ந்து பிரச்சனையாகவே இருக்கிறது.

விஜய் ஒரு இடத்திற்கு வருகிறார் என்றால் 100% கூட்டம் அதிகமாக தான் இருக்கும். 2 மடங்கல்ல 5 மடங்கு கூட்டம் அதிகமாக இருக்கும், எனவே கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாது. தளபதி என் நெஞ்சில் வாடகைக்கு லீசுக்கு இல்லை. நிரந்தரமாக வந்துவிட்டார்...  அவருக்கு நான் உண்மையாகவும், ஆத்மார்த்தமாகவும் இருப்பேன். எனக்கு தலைவர் விஜய் அதிகமாக உதவி செய்து இருக்கிறார். விஜய் அவர்கள் திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழாவில் அவர் கூறியது போல. என்னுடைய தோலை செருப்பாக தைத்துப் போட்டுக் கொள்ளுங்கள் எனக் கூறி இருப்பார். அது நடக்குமோ நடக்காது என தெரியாது. ஆனால் என்னுடைய தோளில் நான் அவரை சுமக்க வேண்டும்.

தவெக முதல் மாநாடு எப்போ..? கொள்கை , செயல் திட்டம் என்ன? கொடிக்கு பின்னால் இருக்கும் சுவாரஸ்யம் - விஜய் தகவல்.. 

த.வெ.க தலைவர் விஜய் கொடி ஏற்றியது முதல் கட்சி மாநாடு வரை ஆரம்பம் முதலே அவருடன் நான் ஓடிக்கொண்டே இருப்பேன். உழைத்துக் கொண்டே இருப்பேன். எங்கு போய் என்ன செய்ய சொன்னாலும் செய்வேன். 2026இல் ஈரோடு இடைத்தேர்தல் வர இருக்கிறது, அதில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடுவது குறித்து தலைவர் அவர் முடிவு தான். அவரின் கண் அசைவு வந்தால் ஆரம்பித்து வேலை செய்வார்கள். அவர் அமைதியாக இருக்கிறார், எது சொன்னாலும் பூகம்பகமாக வெடிக்கிறது. ஜனவரி 27ல் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அந்த சுற்றுப்பயணம் செல்லும் போது இன்னும் மக்களை சந்திப்பது அதிகமாக இருக்கும். உறுப்பினர்களாக இருந்தாலும், நிர்வாகிகளாக இருந்தாலும் அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும். ஒரு நிகழ்ச்சி நடந்தால் உதவியாக இருக்க வேண்டும். தவெக தலைவர் விஜயை  அடுத்த இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்” எனக் கூறினார்.