ஆசிரியர் தாக்கியதில் 11 வகுப்பு மாணவனின் காது ஜவ்வு கிழிந்தது!

 
attack

கிருஷ்ணகிரியில் தனியார் பள்ளியில் 11 வகுப்பு மாணவனை ஆசிரியர் தாக்கியதில் காது ஜவ்வு கிழிந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி அருகே கள்ளகுறி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மகன் முகேஷ் கிருஷ்ணகிரி ராயக்கோட்டை சாலையில் உள்ள வேளாங்கண்ணி சிபிஎஸ்இ பள்ளியில் 11ம் வகுப்பு கம்ப்யூட்டர் அறிவியல் படித்து வருகிறார். இன்று வழக்கம்போல் பள்ளிக்கு சென்ற முகேஷ், வகுப்பறையில் பாடத்தை கவனித்து வந்துள்ளார். அப்போது பாடம் நடத்திகொண்டிருந்த ஆங்கில ஆசிரியர் மனோஜ் குமார் மாணவன் முகேஷிடம் சென்று பாடத்தை ஏன் சரியாக கவனிக்கவில்லை என கேட்டு மாணவனை தாக்கி உள்ளார். இதில் மாணவன் முகேஷ் காதில் ரத்தம் வழிந்து உள்ளது. இதனை கண்ட ஆசிரியர்கள் மாணவனை உடனடியாக கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு மாணவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள், மாணவன் காதில் பலத்த காயம் ஏற்பட்டு ஜவ்வு கிழிந்தது உள்ளதாக கூறினர். இதனையடுத்து மாணவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.