10 கி.மீ வேகத்தில் தமிழ்நாட்டை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்!

 
rain

வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் 10 கிலோ மீட்டர் வேகத்தில் தமிழகத்தை நெருங்கி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று காலை 0830 மணி அளவில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. நாகைக்கு தெற்கு-தென் கிழக்கு பகுதியில் 630 கிலோ மீட்டர் தூரத்திலும், திரிகோணமலைக்கு தெற்கு-தென்கிழக்கில் 340 கிலோ மீட்டர் தூரத்திலும், புதுச்சேரியில் இருந்து 750 கிலோ மீட்டர் தெற்கு-தென்கிழக்கிலும் நிலைகொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் 10 கிலோ மீட்டர் வேகத்தில் தமிழகத்தை நெருங்கி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், வங்க கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்ய கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.