தமிழகம், புதுச்சேரியில் அடுத்த ஒரு வாரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த ஒரு வாரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வருகின்ற 21-ஆம் தேதி வாக்கில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக, 23-ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அதற்கடுத்த இரு தினங்களில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
இந்த நிலையில், இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 21-11-2024 முதல் 24-11-2024 வரை; தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 25-11-2024: கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.