UPSC, SSC தேர்வுகளை கையாள தமிழக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறதா?- திமுக அரசுக்கு பாஜக கேள்வி

 
anbil magesh

பிரதமர் மோடி அரசு UPSC மற்றும் SSC நடத்தும் தேர்வுகளை, அவரவர் மாநில மொழிகளில் நடத்தத் தொடங்கியுள்ள நிலையில், தமிழக மாணவர்கள் அதை கையாள்வதற்கு பயிற்றுவிக்கப்பட்டுள்ளார்களா? என தமிழக பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

anbil

இதுதொடர்பாக தமிழக பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில், “தேசியக் கல்விக் கொள்கையைக் கண்மூடித்தனமாக எதிர்க்கும் திரு. அன்பில் மகேஷ் அவர்களே...
 
1. நீங்கள் மும்மொழிக் கொள்கையை எதிர்ப்பதன் மூலம், தமிழகத்தில் தெலுங்கு, கன்னடம், மலையாளம் அல்லது சௌராஷ்டிராவைத் தாய்மொழியாகக் கொண்ட லட்சக்கணக்கான மொழி சிறுபான்மையின மக்கள் தங்கள் தாய்மொழிகளைக் கற்பதற்கான உரிமை பறிக்கப்படுவது நியாயமா? 

2. தமிழகத்தின் கல்வியமைப்பு தமிழ் மொழியை மையமாகக் கொண்டிருக்கையில், "Foundational Learning Survey 2022" இன் படி, மூன்றாம் வகுப்பு மாணவர்களில் வெறும் 20% மட்டுமே தமிழில் படிக்க முடியும் என்ற நிலை ஏன் உருவானது?

3. தமிழகத்தில் தாய்மொழிக் கல்வி சிறப்பாக இருந்தால், தமிழக மாணவர்களும் பெற்றோர்களும் ஏன் தமிழ் வழிக் கல்வியை அதிகமாக தேர்வு செய்யவில்லை? தமிழை தாய்மொழியாகக் கொண்ட மாணவர்களை தாய்மொழியில் படிக்க ஊக்குவிக்க நீங்கள் என்னதான் செய்தீர்கள்?

4. பிரதமர் மோடி அரசு UPSC மற்றும் SSC நடத்தும் தேர்வுகளை, அவரவர் மாநில மொழிகளில் நடத்தத் தொடங்கியுள்ள நிலையில், தமிழக மாணவர்கள் அதை கையாள்வதற்கு பயிற்றுவிக்கப்பட்டுள்ளார்களா?

5. ⁠மேலும், மருத்துவக் கல்விக்கான புத்தகங்களை தமிழில் மொழிபெயர்ப்பதற்கான முயற்சிகள் 2024-ல் மட்டுமே மேற்கொள்ளப்பட்டன என்பதும், இதற்கு முன்பு தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பொறியியல் புத்தகங்கள் சிறந்த தரத்தில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

6. NEP இல் உள்ள சில குறிப்பிட்ட அம்சங்களை மட்டும் தமிழகத்தில் ஏற்கனவே செயல்படுத்தியுள்ளதாக கூறும் நீங்கள், இன்னும் பல தரமான அம்சங்களையும் உள்ளடக்கிய NEP-யை மொத்தமாக எதிர்ப்பது ஏன்? உங்கள் அரசியல் லாபத்திற்காக தமிழக மாணவர்கள் பாதிப்படைய வேண்டுமா?

Image

7. சமீபத்திய ஆண்டு கல்வி நிலை அறிக்கையின் (ASER) படி, 14-18 வயதுக்குட்பட்ட பதின்ம வயதினரில் கால் பகுதியினர் இரண்டாம் வகுப்பு பாடத்தை கூட படிக்க முடியாது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. "திராவிட மாதிரி" கல்வி மிகவும் பயனுள்ளதாக இருப்பின், தமிழகத்தில் அடிப்படை கற்றல் திறன் ஏன் மோசமாக உள்ளது?

8. தமிழகத்தில் உள்ள 2,600 அரசுப் பள்ளிகளில் ஒரே ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளார், மேலும், 66% பள்ளிகளில் 100-க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர், இவ்வாறு உங்கள் நிர்வாகத்தின் கீழ் அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு பல்வேறு பரிமாணங்களில் மோசமடைந்துள்ளது என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? 

9. ஒருபுறம், ஆசிரியர்கள் பணி நிரந்தரம் மற்றும் முறையான பதவி உயர்வு வழங்கக் கோரி போராட்டம் நடத்தி வருகிறார்கள். மறுபுறமோ, தமிழகத்தில் இன்னும் 13,000 ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பாமல் உள்ளது.

இவ்வாறு குறைந்தபட்ச பணியை கூட செய்யாத நீங்கள், தேர்தலின்போது தமிழக ஆசிரியர்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கியது ஏன்?
இந்த ஆசிரியர் காலிப் பணியிடங்களும், தொடரும் ஆசிரியப் போராட்டங்களும் நம் குழந்தைகளின் கல்வியைப் பாதிக்காதா? பள்ளிக் கல்வித்துறை அமைச்சரான நீங்கள் அதைக் கண்டும் காணாமல் இருப்பது ஏன்?


10. தெலுங்கு, கன்னடம், சௌராஷ்டிரா மற்றும் அரபு பாடங்களுக்கான ஆசிரியர்களை இன்னும் நியமிக்காதது ஏன்? இந்த சிறுபான்மை மொழிகளுக்கான பத்தாம் வகுப்பு மொழி தேர்வுகளை மீண்டும் ஒருமுறை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளீர்களா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளது.