"தலைமையாசிரியருக்கு பதில் அமைச்சரை மாற்ற வேண்டும்"- தமிழிசை சௌந்தரராஜன்
சென்னை அசோக் நகர் பள்ளியின் தலைமையாசிரியருக்கு பதில் அமைச்சரை மாற்ற வேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக் நகர் அரசுப் பள்ளியில் பரம்பொருள் பவுண்டேஷனைச் சேர்ந்த மகாவிஷ்ணு என்பவரை, மாணவர்களுக்கு மோட்டிவேஷனல் ஸ்பீச் வழங்குவதற்காக சிறப்பு விருந்தினராக பள்ளி நிர்வாகத்தினர் அழைத்துள்ளனர். ஆனால் சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மாணவ மாணவியர் முன்னிலையில் முன் ஜென்மத்தில் செய்த தவறுகளால்தான் மாற்றுத்திறனாளிகளாக, ஏழைகளாக இருக்கிறார்கள் என்றும், இந்த ஜென்மத்தில் கண், கை, கால் இல்லாமல் பிறந்தவர்கள் கடந்த ஜென்மத்தில் பாவம் செய்தவர்கள் என்றும் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி, திருவள்ளூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறை சரியான பாதையில் செல்கிறதா என்று தெரியவில்லை. எந்த வழிமுறை மற்றும் விதிமுறை இல்லாமல் செயல்பட்டுவருகிறது. அசோக் நகர் பள்ளியின் தலைமை ஆசிரியரை பணியிடமாற்றம் செய்வதற்கு பதிலாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை மாற்ற வேண்டும். தலைமை ஆசிரியரை பலிகடா ஆக்குவதற்கு பதிலாக அமைச்சர் பொறுப்பேற்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.