தமிழ்நாடு முதலீட்டு மாநாடு 2024 : ரூ. 68,773 கோடி மதிப்பிலான திட்டங்களை இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதலீட்டு மாநாடு 2024ஐ சென்னையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இன்றைய தினம் ரூ.17,616 கோடி முதலீடுகளுக்கான தொடக்க விழாவும், ரூ.51,157 கோடி முதலீடுக்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெறுகிறது.
தமிழகத்தை 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளதார மாநிலமாக உயர்த்தும் இலக்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிர்ணயித்துள்ளார். இந்த இலக்கை அடையும் வகையில், உலக முதலீட்டாளர் மாநாடு, கடந்த ஜன.7 மற்றும் 8-ம் தேதிகளில் நடத்தப்பட்டது. 2 நாட்கள் மாநாட்டில் அதிகாரப்பூர்வ பங்குதாரர் நாடுகளாக சிங்கப்பூர், கொரியா, இங்கிலாந்து, ஜப்பான், பிரான்ஸ், ஆஸ்திரேலியா, ஜெர்மனி, டென்மார்க் மற்றும் அமெரிக்கா ஆகிய 9 நாடுகள் பங்கேற்றன. அதேபோல் 50 நாடுகளை சேர்ந்த தொழில் பிரதிநிதிகள் மற்றும் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில், ரூ.6.64 லட்சம் கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 26.90 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாக முதல்வர் தெரிவித்திருந்தார்.
இதன் ஒரு பகுதியாக சென்னையில் இன்று தமிழ்நாடு முதலீட்டு மாநாடு 2024 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். முதலமைச்சர் வெளிநாட்டு பயணம் மற்றும் உலக முதலீட்டாளர் மாநாடு ஆகியவற்றை சேர்த்து, தமிழகத்தில் முதலீடு செய்திருந்த 19 நிறுவனங்கள் நேரடியாக தயாரிப்புகளை தொடங்கப்பட இருக்கின்றன. இந்த 17,616 கோடி ரூபாய்க்கான முதலீடுகளுக்கான துவக்க விழா இன்று நடைபெற உள்ளது. இந்த முதலீடுகள் மூலம் ஏறத்தாழ 65,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகியுள்ளது.
அத்துடன் உலக முதலீட்டாளர் மாநாட்டில் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு ஒப்புதல்களும் வழங்கப்பட்டு, இன்றைய தினம் ரூ. 51,000 கோடி அளவிலான திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். மொத்தமாக முதலீடுகள் மற்றும் முதலீடுகளுக்கான தொடக்கம் என சேர்த்து 68,773 கோடி ரூபாய்க்கான திட்டம் இன்று தொடங்கப்பட இருக்கிறது. இதன் மூலம் 1 லட்சத்து 6 ஆயிரத்து 800 பேருக்கான உறுதி செய்யப்பட்ட வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் அமெரிக்க பயணத்திற்கு பிறகு தமிழகத்தில் இதுவரை கால் பதித்திராத மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் தமிழகத்திற்கு வரவுள்ளதாக அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.