தமிழ்நாடு அரசு நடவடிக்கை : நெடுஞ்சாலை பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்..!
தமிழக அரசு, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை ஒட்டி அமைந்துள்ள பள்ளிகள் இனி நேரடியாக நெடுஞ்சாலையை நோக்கித் திறக்கும் வகையில் நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களை (Entry/Exit Gates) அமைக்கக் கூடாது என அதிரடி தடை விதித்துள்ளது. மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சாலை விபத்துகளைக் குறைக்கவும் இந்த முக்கிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, 'தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி விதிகள்-2019'-ல் செய்துள்ள திருத்தத்தின்படி, நெடுஞ்சாலை ஓரத்தில் புதிதாகக் கட்டப்படும் பள்ளிகள் சில விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அதன்படி, பள்ளி வளாகத்தின் முன்பகுதி முழுவதும் 7 மீட்டர் அகலத்திற்குப் பிரத்யேக சர்வீஸ் சாலையை பள்ளி நிர்வாகமே அமைத்துப் பராமரிக்க வேண்டும். இந்தப் பிரத்யேகச் சாலைக்குப் பின்னரே பள்ளியின் சுற்றுச்சுவர் அமைய வேண்டும்.
இந்த புதிய விதிகளின்படி, நுழைவாயில் 9 முதல் 12 மீட்டர் அகலத்தில் இருக்க வேண்டும். மேலும், நெடுஞ்சாலைக்கும் சர்வீஸ் சாலைக்கும் இடையே 1 மீட்டர் உயரத்திற்குப் பாதுகாப்புத் தடுப்பு வேலிகள் கட்டாயம் அமைக்கப்பட வேண்டும். தற்போது சென்னை ஜி.என்.டி சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, ஆற்காடு சாலை போன்ற முக்கியப் பகுதிகளில் இத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால், மாணவர்கள் ஆபத்தான முறையில் சாலையைக் கடக்க நேரிடுகிறது.
அரசின் இந்த முடிவை பெற்றோர்கள் மிகுந்த வரவேற்புடன் ஏற்றுக் கொண்டுள்ளனர். தற்போது பள்ளி வாயிலில் வாகனங்களை நிறுத்த இடமில்லாத நிலையில், புதிய சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டால், குழந்தைகள் பாதுகாப்பாக வாகனங்களில் ஏறி, இறங்க முடியும் என்று பெற்றோர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து போக்குவரத்து வல்லுநர்கள் கூறுகையில், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் செல்லும் நெடுஞ்சாலைகளை, அகலமான நடைபாதைகளுடன் கூடிய நகர்ப்புற சாலைகளாக மறுவடிவமைப்பு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும், மத்திய அரசின் சாலைப் போக்குவரத்து அமைச்சக விதிகளை மாநில நெடுஞ்சாலைத் துறை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


