சிவாஜி கணேசன் 97வது பிறந்தநாள் : நாளை மரியாதை செலுத்துகிறார் முதல்வர் ஸ்டாலின்..!

 
சிவாஜி கணேசன் 97வது பிறந்தநாள் : நாளை மரியாதை செலுத்துகிறார் முதல்வர் ஸ்டாலின்..!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 97-அது பிறந்த நாளையொட்டி, அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார்.  

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 97-வது பிறந்த நாளை முன்னிட்டு, 1.10.2024 அன்று காலை 10.00 மணியளவில், சென்னை அடையார். தேஷ்முக் சாலையில் அமைந்துள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் அன்னாரது திருவுருவச் சிலைக்கு அருகே வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தவுள்ளார்கள்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பிறந்த நாளை முன்னிட்டு, அரிய புகைப்படத் தொகுப்புகளுடன் புகைப்படக் கண்காட்சியும் இம்மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசன் அவர்கள் 1.10.1928 ஆம் ஆண்டு பிறந்தார். "நடிப்பு தனது மூச்சு என்றும், நடிப்பு ஒன்றுதான் தனக்குத் தெரிந்த தொழில், நடிப்புதான் எனக்குத் தெய்வம்" என சிவாஜி கணேசன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். குழந்தைப் பருவம் முதற்கொண்டே நடிப்பதில் ஆர்வம் கொண்டு பல்வேறு நாடகங்களில் பங்கேற்று நடித்து வந்தார். பேரறிஞர் அண்ணா அவர்களால் எழுதப்பட்ட "சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்" என்கிற நாடகத்தில் சிவாஜியாக நடித்தார். அவரின் நடிப்புத் திறமையினை பாராட்டி தந்தை பெரியார் அவர்கள் "சிவாஜி கணேசன்" என்று பெயர் சூட்டினார். 

முக ஸ்டாலின்

சிவாஜி கணேசன் அவர்கள் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் கதை வசனத்தில் உருவாகிய பராசக்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தமிழ் திரைப்பட உலகில் 300 மேற்பட்ட திரைப்படங்கள், 2 இந்தி படங்கள், 9 தெலுங்கு திரைப்படங்கள் மற்றும் ஒரு மலையாளத் திரைப்படத்திலும் நடித்து பிரபலமானார்.

சிவாஜி கணேசன் அவர்களை "நடிகர் திலகம்", "நடிப்புச் சக்கரவர்த்தி" என்றும் மக்களாலும், திரை உலகத்தினராலும் அழைக்கப்பட்டார். இவர் நடித்த பராசக்தி, மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டியத் தமிழன், இராஜராஜ சோழன், கர்ணன் உள்ளிட்ட பல வரலாற்று சிறப்புமிக்க திரைப்படங்கள் காண்போரின் மனதில் இன்றும் நிலைத்து நிற்கின்றன.

உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட அற்புத கலைஞன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நடிப்பு திறமையை பாராட்டி பத்ம ஸ்ரீ விருது. பத்ம பூஷன் விருது. செவாலியே விருது மற்றும் தாதா சாகிப் பால்கே விருது உள்ளிட்ட பல விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டுள்ளது. 

சிவாஜி கணேசன் 97வது பிறந்தநாள் : நாளை மரியாதை செலுத்துகிறார் முதல்வர் ஸ்டாலின்..!

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை திறப்பு விழாவில், "நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் என்னுடைய அருமைத் தோழர்! ஆருயிர் நண்பர். என்றும் தமிழாக வாழக்கூடியவர். தமிழ் உரைநடையாக வாழக்கூடியவர், என்றும் கதாபாத்திரத்திற்கு உயிரூட்டக்கூடியவர், என்றும் என்னுடன் கலந்துவிட்டவர் சிவாஜி கணேசன் அவர்கள்! அவர் சிலையைத் திறந்து வைப்பதில் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன்" என்று புகழ்ந்துரைத்தார். 

 தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், நடிப்பின் இமயமாய், தமிழர்களின் கம்பீரமான கலையுலக அடையாளமாய் என்றென்றும் உயர்ந்து நிற்கும் நடிகர் திகலசம் சிவாஜி கணேசன் அவர்களின் புகழ். தரணியும் தமிழும் உள்ளவரை என்றென்றும் நிலைத்திருக்கும் என்று பாராட்டியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் சார்பில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் 97-வது பிறந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்படவுள்ளது. இந்நிகழ்ச்சியில்,  அமைச்சர் பெருமக்கள், மேயர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், துணை மேயர். உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.