தமிழக மக்களை காக்க கடும் நடவடிக்கைகளை எடுப்பேன் : சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி..!

 
1

சட்டப்பேரவையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரம் தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானங்கள் மீதான விவாதத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்தார். அதில், கள்ளச் சாராயம் அருந்தி உயிரிழந்தது வேதனையை தருகிறது. அவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்கிறேன். மெத்தனால் கலந்த சாராயத்தை அருந்தியதால் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது. உடனடியாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவ சிகிச்சை அளிக்க அறிவுறுத்தினேன். மேலும், விழுப்புரம், சேலம், திருச்சி, செங்கல்பட்டில் இருந்து 57 மருத்துவர்கள், செவிலியர்கள் கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் இதுபோன்ற நிகழ்வுகளில் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் உயிர் காக்கும் நிகழ்வுகள் போதுமான அளவில் இருப்பில் வைக்கப்பட்டுள்ளன. மருந்துகள் தேவைப்பட்டால் வெளிச்சந்தையில் வாங்கி, பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 164 நபர்களில் 117 நபர்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். 52 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கோவிந்த ராஜ் என்ற கன்னுக்குட்டி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 200 லிட்டர் மெத்தனால் சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் மூவரும் இதில் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளச் சாராய மரணங்கள் தொடர்பாக இரண்டு நாளில் அறிக்கை கொடுக்க சொல்லியுள்ளேன். அறிக்கை கிடைத்ததும் அதன் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்துவேன் என உறுதியளிக்கிறேன். 

கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மற்றும் போதைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது பாரபட்சமின்றி குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் உத்தரவிட்டுள்ளேன். இந்த அரசுப் பொறுப்பேற்றதிலிருந்து 14 ஆயிரத்து 606 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 10 ஆயிரத்து 154 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 58 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இப்படி இந்த அரசானது கள்ளச்சாராயத்தை அறவே ஒழிப்பதற்கு மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையிலும், இதுபோன்ற சில விரும்பத்தகாத நிகழ்வுகள் ஏற்படுவது மிகவும் வேதனைக்குரியது. இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் இந்த அரசு செய்யும். அதனடிப்படையில், இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்கவும், அவர்களின் எதிர்கால நலனை கருத்திற்கொண்டும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டு 10 இலட்சம் ரூபாய் நிவாரண நிதியுடன் பின்வரும் நிவாரணங்கள் கூடுதலாக வழங்கப்படும். 

பெற்றோர் இருவரையோ அல்லது ஒருவரையோ இழந்து வாடும் குழந்தைகளின் பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும். பெற்றோர்கள் இருவரையும் இழந்து ஆதரவின்றி தவிக்கும் ஒவ்வொரு குழந்தையும் பாதுகாவலர் பராமரிப்பில் வளர, அவர்கள் 18 வயது நிறைவடையும் வரை மாத பராமரிப்புத் தொகையாக தலா ரூ.5,000 வழங்கப்படும்.

பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு உடனடி நிவாரணத் தொகையாக அவர்களின் பெயரில் தலா ஐந்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிலையான வைப்புத் தொகையில் வைக்கப்படும். அவர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவுடன் அந்தத் தொகை வட்டியுடன் அவர்களுக்கு வழங்கப்படும். பெற்றோர் இருவரில் ஒருவரை இழந்து வாடும் குழந்தைகளுக்கு தலா மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும்.

பெற்றோர் இருவரையோ அல்லது ஒருவரையோ இழந்து வாடும் குழந்தைகளுக்கு, அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளிலும் முன்னுரிமை வழங்கப்படும். பெற்றோரை இழந்த குழந்தைகள், அவர்களது விருப்பத்தின் பேரில், அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் இல்லங்கள் மற்றும் விடுதிகளில் சேர்க்கப்படுவர்.

மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாவண்ணம் அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கவும், கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து ஒரு விரிவான விசாரணை மேற்கொள்ள, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த ஆணையம், இதுகுறித்து முழுமையாக விசாரித்து, தனது பரிந்துரைகளை மூன்று மாதங்களுக்குள் வழங்கும். அதனடிப்படையில் இந்த அரசு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

”நடைபெற்ற சம்பவத்துக்கு முதலமைச்சர் பொறுப்பேற்க வேண்டும்” என்று இங்கு பேசினார்கள். உள்துறையைக் கவனிப்பவன் என்ற முறையில் மட்டுமல்ல; தமிழகத்தின் முதலமைச்சர் என்ற முறையில் எந்தப் பிரச்சினையில் இருந்தும் ஓடி ஒளிபவனல்ல நான். பொறுப்பை உணர்ந்ததால்தான் பொறுப்புடன் பதில் அளித்துக் கொண்டிருக்கிறேன். எடுத்த நடவடிக்கைகளையும் பட்டியலிட்டிருக்கிறேன். குற்றவாளிகளைக் கைது செய்து விட்டுத்தான் உங்களுக்கு பதில் அளித்திருக்கிறேன். திறந்த மனத்தோடு இரும்புக் கரம் கொண்டு குற்றம் புரிந்தவர்களை அடக்கி வருகிறேன். துயரம் மிகுந்த இந்தச் சம்பவத்தை வைத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். என்னை பொறுத்தவரை, சமூக விரோத சக்திகளிடம் இருந்து மக்களைக் காக்க எந்தவிதமான கடுமையான நடவடிக்கைகளையும் எடுப்பேன் என உறுதி அளிக்கிறேன்.” என்று தெரிவித்தார்.