பயணிகள் கவனத்திற்கு! தாம்பரம் - நெல்லை சிறப்பு ரயில் நேரம் மாற்றம்!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு இயக்கப்படவுள்ள சிறப்பு ரயில் ஒரு மணி நேரம் முன்னதாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை வருகிற 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசித்து வரும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். அவ்வாறு சொந்த ஊர் செல்லும் மக்களின் வசதிக்காக மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகின்றன. தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல் ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு இயக்கப்படவுள்ள சிறப்பு ரயில் ஒரு மணி நேரம் முன்னதாக புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரத்திலிருந்து நெல்லைக்கு ஜனவரி 13, 20, 27ம் தேதிகளில் இயக்கப்படவுள்ள சிறப்பு ரயில் (06091) தாம்பரத்திலிருந்து பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. தற்போது, தாம்பரத்திலிருந்து ஒரு மணி நேரம் முன்னதாக பிற்பகல் 2.30 மணிக்கு புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவிக்கப்பட்டுள்ளது.