கார் மீது லாரி மோதி விபத்து - உயிருக்கு போராடிய ஓட்டுநர் மீட்பு!
சென்னை தாம்பரம் அருகே கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் படுகாயங்களுடன் உயிருக்கு போராடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் இருந்து சென்னை விமான நிலையம் நோக்கி இன்னோவா கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. தாம்பரம் அருகே சென்றுகொண்டிருந்த போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இன்னோவா கார் ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் படுகாயம் அடைந்த ஓட்டுநர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் மற்றும் வாகன ஓட்டிகள் அந்த ஓட்டுநர் லட்சுமிகாந்தனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனால் தாம்பரம் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.