டி20 கிரிக்கெட்- மெட்ரோ ரயிலில் இலவச பயணம்

சேப்பாக்கத்தில் 25ம் தேதி இங்கிலாந்து- இந்தியா மோதும் டி20 போட்டிக்கு செல்லும் ரசிகர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.
இங்கிலாந்து அணி இந்தியாவின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடருக்கான சூர்யகுமார் யாதவ் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 வடிவத்துக்கு ஏற்றவாறு விளையாடும் அணியாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் உள்ளன. இரு அணி வீரர்களும் அதிரடியாக விளையாடும் வல்லமை உடையதால் இந்த டி20 தொடர் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் முதலாவது டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நாளை நடைபெற உள்ளது. 2வது டி20 போட்டி சென்னை சேப்பாக்கத்தில் 25ம் தேதி நடைபெற உள்ளது. இந்தப் போட்டியை காண டிக்கெட் வைத்திருப்போர் மெட்ரோ ரயிலில் இலவசமாக செல்லலாம் என தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.