சூர்யா பேனரை கிழித்து, தீ வைத்து கொளுத்திய மர்மநபர்கள்

 
surya

சிதம்பரம் அருகே நடிகர் சூர்யா பேனரை கிழித்து, தீ வைத்து கொளுத்தும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

நவம்பர் 2ஆம் தேதி நடிகர் சூர்யா நடிப்பில் ஜெய்பீம் படம் வெளியானது. உண்மைச் சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்ட ஜெய்பீம், 90-களில் நீதியரசர் சந்துரு வழக்கறிஞராக இருக்கும்போது திறமையாக வாதாடி பழங்குடியின பெண்ணுக்கு நீதி பெற்று கொடுத்த கதையை மையமாக கொண்டுள்ளது. இப்படத்தை இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கியிருந்தார். இப்படம், இருளர் இன மக்களின் இன்னல்களையும் காவல் துறையின் அத்துமீறல்களையும் தோலுரித்து காட்டியிருக்கும் இப்படத்தில், அனைத்து கதாபாத்திரங்களுக்கும் உண்மை பெயரை சூட்டி விட்டு திட்டமிட்டு வன்னியர் சமுதாயத்தினரை இழிவு படுத்தும் விதமாகவும் குற்றவாளி கதாபாத்திரத்திற்கு மட்டும் மறைந்த வன்னியர் சங்க தலைவர் குரு பெயரை சூட்டி குற்றவாளி வீட்டில் வன்னியர் சங்க அக்னிகுண்ட சின்னத்தைக் காட்டி மிகப்பெரிய களங்கத்தை ஏற்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. 

நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்தும், அதனால்  ஏற்பட்ட சர்ச்சைகளுக்கு பிறகும் சில இடங்களில் விரும்பத்தகாக சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சேந்திரக்கிள்ளை கிராமத்தில் நடிகர் சூர்யாவின் ஜெய்பீம் திரைப்பட பேனரை அந்த ஊரைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கிழித்து, தீ வைத்து கொளுத்தும் படக் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில், சூர்யா பட பேனரை கிழித்து கீழே போட்டு, பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொளுத்துகின்றனர். பின்னர் அதன் மேல் வெடி வைத்து வெடிக்கின்றனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதுகுறித்து  பரங்கிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி  வருகின்றனர்.