உச்ச நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி மனு!
பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டதாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பாக விசாரிக்க சுதந்திரமான குழு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்றும், அந்தக் குழுவின் செயல்பாடுகளை உச்ச நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “திருப்பதி திருமலை கோயில் பிரசாதத்தில் விலங்குகளின் இறைச்சி மற்றும் பிற அழுகிய பொருட்கள் கலப்படம் செய்யப்பட்டதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு முன்வைத்துள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டை விசாரிக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் இன்று நான் பொதுநல மனு தாக்கல் செய்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) முன்னாள் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஒய்.வி.சுப்பா ரெட்டியும், இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியின் கீழ் ஒரு விசாரணைக் குழுவை அமைத்து விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
முன்னதாக, ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு கலந்திருந்ததாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கடந்த 18-ம் தேதி தெரிவித்தார். இதையடுத்து இந்த விவகாரம் சர்வதேச அளவில் மிகப் பெரிய விவாதப் பொருளாக மாறியது.
இதையடுத்து, கடந்த 20-ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய திருப்பதி பெருமாள் கோயிலை நிர்வகிக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் ஷியமலா ராவ், “தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரிகளில் விலங்கு கொழுப்பு மற்றும் பன்றிக்கொழுப்பு இருப்பது ஆய்வக சோதனைகளில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான நான்கு அறிக்கைகளும் ஒரே மாதிரியான முடிவுகளைத் தந்தன. எனவே நாங்கள் உடனடியாக விநியோகத்தை நிறுத்தினோம். மேலும் ஒப்பந்தக்காரரை பிளாக் லிஸ்ட்டில் வைத்துள்ளோம். அபராதம் விதிக்கும் நடைமுறையும் தொடங்கப்படும். அதோடு, சட்டப்படியும் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
எனினும், இந்த குற்றச்சாட்டை ஜகன் மோகன் ரெட்டி திட்டவட்டமாக மறுத்தார். கடந்த 20ம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய அவர், “திருப்பதி பெருமாள் கோயில் லட்டு தயாரிக்கப்பட்ட நெய்யில், விலங்குகளின் கொழுப்பு இருந்ததாக வெளியாகி உள்ள அறிக்கை தவறானது. முதல்வர் சந்திரபாபு நாயுடு, மக்களின் நம்பிக்கையை அரசியலுக்காகப் பயன்படுத்துகிறார்” என கூறினார்.