நள்ளிரவில் வீடுகள் மீது விழும் கற்கள்- ‘குட்டிசாத்தான்’ என தூக்கத்தைத் தொலைத்த மக்கள்

 
நள்ளிரவில் வீடுகள் மீது விழும் கற்கள்- ‘குட்டிசாத்தான்’ என தூக்கத்தைத் தொலைத்த மக்கள்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே ஓட்டப்பாளையம் பகுதியில் நள்ளிரவு நேரங்களில் வீடுகளின் மேல் கற்கள் விழுவதாக எழுந்த புகாரில், மின்விளக்குகள், பறக்கும் சிசிடிவி கேமரா மற்றும் கிரேன் உதவியுடன் தீவிர கண்காணிப்பில் கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கற்கள்

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த ஒட்ட பாளையம் கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 12 நாட்களாக இரவு நேரத்தில் 7 மணி முதல் ஒரு மணி வரையிலும் வீட்டின் மீது தொடர்ந்து கற்கள் விழுந்த வண்ணம் இருந்துள்ளது. இதனால் அப்பகுதி பொதுமக்கள் குட்டிச்சாத்தான் கற்களை வீசுவதாக அச்சமடைந்து அருகில் இருந்த கருப்பராயன் கோவிலில் தஞ்சமடைந்தனர்.

ஓட்டபாளையம் மக்கள்

பொதுமக்களின் அச்சம் காரணமாக அந்த பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் அந்தப் பகுதி முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு மின்விளக்குகள் அமைத்து கிரேன் உதவியுடன் தீவிர கண்காணிப்பு பணி நடைபெற்று வருகிறது. மேலும் ட்ரோன் கேமரா மூலமாக தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதனிடையே கற்கள் வீசப்பட்டதால் ஏற்பட்ட சேதம் குறித்தும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்தும், காங்கேயம் வட்டாட்சியர் மயில்சாமி கிராமத்தில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் கற்கள் வீசும் நபர் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்றும் தெரிவித்தார்.