செங்கோட்டையிலிருந்து மைசூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!
அடுத்த மாதம் செப்டம்பர் 4, 5, 7, 8 ஆகிய தேதிகளில் செங்கோட்டையிலிருந்து மானாமதுரை, காரைக்குடி, பெங்களூரு வழியாக மைசூர் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. முழு முதல் கடவுளான விநாயகனை அவரது பிறந்த நாளான இன்று விநாயகர் சதுர்த்தி என்று மக்கள் கொண்டாடி வருகின்றனர். அறிவு ,ஞானம், கல்வி ஆகியவற்றை கடவுளாகவும் எந்த விஷயத்தை முதலில் எடுத்தாலும், விநாயகரை வணங்கி தான் செய்ய வேண்டும் என்ற ஐதீகமும் இன்று வரை தொடர்ந்து இருந்து வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் விநாயகர் சிலைகளை ஆங்காங்கே வைத்து மூன்று நாட்கள் கழித்து ஊர்வலமாக கொண்டு சென்று நதிகளில் கரைப்பது வழக்கம்.
இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு அடுத்த மாதம் செப்டம்பர் 4, 5, 7, 8 ஆகிய தேதிகளில் செங்கோட்டையிலிருந்து மானாமதுரை, காரைக்குடி, பெங்களூரு வழியாக மைசூர் வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. 4 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மைசூரில் இருந்து இரவு 9.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 4.50 மணிக்கு செங்கோட்டையை சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் செங்கோட்டையிலிருந்து 5 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இரவு 7:45க்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 2.20 மணிக்கு மைசூரை சென்றடைகிறது. மைசூர் - செங்கோட்டை செல்லும் இந்த சிறப்பு ரயில் புதுக்கோட்டை வழியே செல்லும். மைசூரு - செங்கோட்டை சிறப்பு வண்டிக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது. இதேபோல் செங்கோட்டை - மைசூரு வழி புதுக்கோட்டை சிறப்பு வண்டிக்கு முன்பதிவு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.