தனியாக சந்தித்து மன்னிப்பு கேட்பதாக சீமான் தூது விட்டார் - எஸ்.பி வருண் குமார் பேட்டி

 
seeman

தனியாக சந்தித்து மன்னிப்பு கேட்பதாக சீமான் ஒரு தொழிலதிபர் மூலம் தனக்கு தூது விட்டார் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்துக்களை பதிவு செய்து வந்தனர். இது குறித்து எஸ் பி வருண்குமார் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி தில்லைநகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டனர்.  அவதூறாக பேசியது தொடர்பாக விளக்கம் கேட்டு திருச்சி எஸ்பி வருண்குமார் சார்பில் சீமானுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. மேலும் சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருச்சி எஸ்பி வருண்குமார் சார்பில் வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் என்பவர் திருச்சி குற்றவியல் நீதிமன்றம் எண் 4-ல் வழக்கு தொடர்ந்தார். 

இந்த நிலையில், வழக்கு தொடர்பாக திருச்சி நீதிமன்றத்தில் SP வருண்குமார் ஆஜரானார். எஸ்பியின் விளக்கத்தை கேட்ட நீதிபதி, வழக்கு  விசாரணையை ஜனவரி 7ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி வருண் குமார், சீமான் மன்னிப்பு கேட்டாலும் ஏற்க மாட்டேன். "நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பொதுவெளியில் மன்னிப்பு கேட்டாலும்,அதை ஏற்க மாட்டேன். சீமான் முறைப்படி நீதிமன்றத்தில் மன்னிப்பு கோரி மனு அளித்தால், தனது நிலைப்பாடு குறித்து தெரிவிப்பேன். தனியாக சந்தித்து மன்னிப்பு கேட்பதாக சீமான் ஒரு தொழிலதிபர் மூலம் தனக்கு தூது விட்டார் என கூறினார்.