மெழுகுவர்த்தி கேட்ட தந்தையை அடித்துக் கொன்ற மகன் கைது

 
murder

திருவள்ளூர் அருகே இரவு மின்சாரம் தடைபட்டதால் மகனிடம் மெழுகுவர்த்தி கேட்ட தந்தையை மனநலம் குன்றிய மகன் அடித்து கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அடுத்த வெங்கத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்( வயது 50). கூலித்தொழிலாளியான இவரது ஒரே மகன் பாண்டியன் (வயது 28). மனநிலை பாதிக்கப்பட்டவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. மனநலம் பாதிக்கப்பட்ட தன் மகனை பெற்றோர் பல்வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற்றும் அவர் குணமாகவில்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலகிருஷ்ணன் தனது மகனை சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்று, சிகிச்சைக்கு பின் மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று பாலகிருஷ்ணனின் மனைவி உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார்.  வீட்டில் பாலகிருஷ்ணன் மற்றும் அவரது மகன் பாண்டியன் ஆகியோர் மட்டும் இருந்துள்ளனர். நேற்று நள்ளிரவு நேரத்தில் மின்சாரம் தடைபட்டது. அப்போது பாலகிருஷ்ணன் தன் மகன் பாண்டியனிடம் மெழுகுவர்த்தியை கொண்டு வருமாறு கூறியுள்ளார்.  நீண்ட நேரம் ஆகியும் பாண்டியன் மெழுகுவர்த்தி கொண்டு வராததால் தந்தை மகனுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மனநலம் குன்றிய மகன் பாண்டியன், வீட்டின் மொட்டை மாடிக்கு தந்தையை அழைத்து சென்று  உருட்டு கட்டையால் தாக்கி தந்தையை கொலை செய்தார். 

இச்சம்பவம் குறித்து மணவள நகர் காவல் துறையினருக்கு அக்கம்பக்கத்தினர் புகார் செய்ததன் அடிப்படையில், அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர், பாலகிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தந்தையைக் கொன்ற மனநலம் குன்றிய மகனை காவல்துறை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.