“எப்ப பார்த்தாலும் செல்போன்..” தந்தை கண்டித்ததால் மகன் தூக்கிட்டு தற்கொலை
புளியங்குடியில் செல்போன் பார்ப்பதை தந்தை கண்டித்ததால், மகன் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
தென்காசி மாவட்டம், புளியங்குடி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் சாமி. இவரது மகனான கார்த்திகேயன் (வயது 15) என்பவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில், கார்த்திகேயனுக்கும், அவரது அண்ணனுக்கும் இடையே செல்போன் பார்ப்பது தொடர்பாக அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. குறிப்பாக, வீட்டில் உள்ள ஒரு செல்போனை இரண்டு நபர்களும் மாறி, மாறி பார்த்து வந்த நிலையில் அவ்வப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அதை கவனித்த அவரது தந்தை பெருமாள் சாமி இரண்டு பேரும் செல்போன் பார்ப்பது தவறு எனக்கூறி இரண்டு பேரையும் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த கார்த்திகேயன் தனது வீட்டில் இருந்த துண்டை எடுத்து தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை, உடனே இது தொடர்பாக புளியங்குடி போலீசருக்கு தகவல் தெரிவிக்கவே, தகவலின் பேரில் விரைந்து வந்த புளியங்குடி போலீசார் கார்த்திகேயனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், சம்பவம் தொடர்பாக புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், செல்போன் பார்ப்பதை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த மாணவன் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.