விமானப்படை அணிவகுப்பு நிகழ்வின்போது மயங்கிய வீரர்கள்.. ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் சென்ற சக வீரர்கள்..!
தாம்பரம் விமானப்படை தளத்தில் நடந்த வீரர்கள் அணிவகுப்பின்போது விமானப்படை வீரர் ஒருவர் மயங்கி விழுந்த நிலையில், சக வீரர்கள் ஓடி வந்து ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் சென்றனர்.
விமானப்படையின் 92வது ஆண்டு தினத்தையொட்டி சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு மற்றும் விமான சாகச கண்காட்சியும் நடைபெற்றது. 1932 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்திய விமானப்படை இன்று தனது 93வது பிறந்தநாளை கொண்டாடுகிறது. இதையொட்டி விமானப்படையின் பிரமிக்க வைக்கும் சாகச கண்காட்சி கடந்த 6ம் தேதி மெரினா கடற்கரையில் நடைபெற்றது.
அதில் பழமையான டக்கோடா ரக விமானங்கள் தொடங்கி அதிநவீன ரபேல் விமானம் வரை மக்களுக்கு மிக நெருக்கமாக பறந்து சாகசத்தில் ஈடுபட்டன. சுமார் 15 லட்சம் மக்கள் கண்டுரசித்த இந்த சாகச கண்காட்சி லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றது. இதை தொடர்ந்து விமானப்படை நிறுவன தினமான இன்று தாம்பரம் விமானப்படைத் தளத்தில் விமானப்படை வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது.
தொடர்ந்து நடைபெற்ற விமானப்படை சாகச நிகழ்வில், விமானப் படையின் சாரங் விமானப்படை ஹெலிகாப்டர் சாகச குழு, சூரியகிரண் விமான சாகச குழு, SU-30 MKI, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட லைட் காம்பேக்ட் ஏர்கிராஃப்ட் வகையான தேஜஸ், பிரச்சன், எல்.சி.எச் ஹெலிகாப்டர்கள் சாகசத்தில் ஈடுபட்டன. மேலும் இன்றைய சாகச நிகழ்வை விமானப்படை வீரர்கள் மற்றும் ஓய்வு பெற்ற விமானப்படை வீரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் கண்டு ரசித்தனர்.
இந்நிலையில், தாம்பரம் விமானப்படை தளத்தில் நடந்த வீரர்கள் அணிவகுப்பின்போது வெயிலின் தாக்கத்தால் விமானப்படை வீரர்கள் சிலர் திடீரென மயங்கி விழுந்தனர். ஆனால் அங்கு சிறு பரபரப்பும் இன்றி விமானப்படை வீரர்கள் அப்படியே அணிவகுப்பிற்காக நின்றிருந்தனர். அதேநேரம் உடனடியாக ஸ்ட்ரெச்சருடன் ஓடி வந்த சக வீரர்கள், மயங்கி விழுந்த வீரர்களை அங்கிருந்து தூக்கிச் சென்றனர். அதேபோல் மயங்கியவரின் இடத்தில் உடனடியாக மற்றொரு வீரர் வந்து நின்றுகொண்டார். சில நிமிடங்களிலேயே அங்கு மீண்டும் இயல்பான சூழல் நிலவியது.