சுங்கச்சாவடி கண்ணாடி, சிசிடிவி கேமராக்களை அடித்து நொறுக்கிய மனிதநேய மக்கள் கட்சியினர்

 
கண்ணாடி

காலாவதியான சுங்கச்சாவடிகளை மூட வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சியினர் திருச்சியில் சுங்கச்சாவடி முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு முழுவதும் 70 சுங்கச்சாவடிகள் செயல்பட்டு வருகிறது. அதில் 30 சுங்கச்சாவடிகள் காலாவதியாகிவிட்டதாக அரசு அறிவித்துள்ளது. அந்த சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என வலியுறுத்தி தமிழக அரசு ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. இருந்தபோதும்  ஒன்றிய அரசு அந்த சுங்கச்சாவடிகளை மூடாமல் கட்டண கொள்ளையில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டி காலாவதியான சுங்க சாவடிகளை உடனடியாக மூட வேண்டும், தமிழ்நாட்டில் 9 சுங்கச்சாவடிகள் மட்டுமே செயல்பட வேண்டும், புதிதாக சுங்கச்சாவடிகள் திறக்க கூடாது, சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மனித நேய மக்கள் கட்சி சார்பில் துவாக்குடி, விக்கிரவாண்டி, பரந்தூர் உள்ளிட்ட 7 சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி இன்று திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி பகுதியில் அமைந்துள்ள சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு திருச்சி மாவட்ட மனிதநேய மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சுங்க சாவடி முன்பு தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் சுங்கச்சாவடிக்குள் நுழைந்து அங்குள்ள கண்ணாடிகள், கேமராக்கள், தடுப்புகளை அடித்து உடைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக கட்சியின் நிர்வாகிகளும் போலீசாரும் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ம.ம.க பொதுச் செயலாளர் அப்துல் சமது தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் அக்கட்சியை சேர்ந்த 700க்கும் மேற்பட்டோர் பங்கேற்று  கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.