சென்னையில் நவ.1ல் இறைச்சிக் கூடங்கள் மூடல்!
மகாவீர் நிர்வான் தினத்தை முன்னிட்டு, சென்னையில் இறைச்சிக் கூடங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது.
சமண மதத்தின் மிக முக்கிய துறவி மகாவீரர். இவர் வாழ்ந்த காலத்தில் பிற உயிர்களிடத்தில் அன்பு காட்டியவர். குறிப்பாக புலால் புசித்தலை மறுத்தவர். மிருகங்களைத் துன்புறுத்தவோ, கொல்லவோ கூடாது என்ற கருத்தை தீர்க்கமாக முன்வைத்தவர். இவர் முக்தி (மரணம்) அடைந்த நாள் சமண மதத்தைச் சேர்ந்தவர்களால் தீபாவளியாகக் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் நவம்பர் 1-ஆம் தேதி மகாவீரர் நிர்வான் நாள் வருகிறது. இந்த நாளில் உயிர்களை வதம் செய்ய கூடாது என்பதால் இறைச்சி கடைகள் செயல்பட தடை விதிக்கப்படும்.
மகாவீர் நிர்வான் தினத்தை முன்னிட்டு, பொது சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக் கூடங்கள் வருகிற நவம்பர் ஒன்றாம் தேதி மூடப்படுவதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. ஜெயின் கோயில்களிலிருந்து 100 மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் மூடப்பட்டு இறைச்சி விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.