இனியும் நாட்டின் தலைநகராக டெல்லி இருக்க வேண்டுமா?: சசி தரூர்!

 
1

டெல்லியின் பல பகுதிகளிலும் காற்றின் தரக் குறியீடு 500-ஐ நெருங்கியுள்ளது. டெல்லியில் காற்று மாசு அதிகரித்துள்ளதால் கடந்த இரண்டு நாட்களாக டெல்லியில் சுவாசப் பிரச்சினைகளோடு மருத்துவமனைகளுக்கு வருவோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் டெல்லி காற்று மாசு குறித்து காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் எக்ஸ் சமூகவலைதளப் பக்கத்தில், “உலகிலேயே மிக மோசமான காற்று மாசு கொண்ட நகரம் டெல்லி என்பது ஏற்கெனவே அதிகாரபூர்வமாக உறுதியாகிவிட்டது. உலகின் இரண்டாவது மாசடைந்த தாக்கா நகரைவிட 4 மடங்கு அதிகமான நச்சு டெல்லி காற்றில் உள்ளது. நமது அரசாங்கம் பல ஆண்டுகளாக இந்த நிலையை எதிர்கொண்டு வருகிறது. ஆனால், அதைப் பற்றி எதுவும் செய்யவில்லை என்பது புரிந்துகொள்ள முடியாதது. நானும் கடந்த 2015 முதல் எம்.பி.க்கள், சுற்றுச்சூழல் வல்லுநர்கள், மாசு கட்டுப்பாட்டில் பங்குதாரர்களுக்காக காற்றின் தர வட்ட அட்டவணையை நடத்தினேன், ஆனால் கடந்த ஆண்டு கைவிட்டேன், ஏனெனில் எதுவும் மாறவில்லை, யாரும் கவலைப்படவில்லை. இந்த நகரம் நவம்பர் முதல் ஜனவரி வரை வசிக்கவே முடியாத நகரமாகிவிடுகிறது. ஆண்டின் மற்ற மாதங்களில் ஏதோ பிழைக்கலாம் என்பதுபோல் உள்ளது. இத்தகையச் சூழலில், டெல்லி இனியும் நாட்டின் தலைநகராக இருக்க வேண்டுமா?” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, நேற்று மாலை டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் சுகாதாரத் துறைக்கு பிறப்பித்த உத்தரவில், லோக் நாயக் மருத்துவமனையில் சிறப்பு செயற்குழு அமைத்து காற்று மாசு காரணமாக ஏற்படும் மருத்துவ அவசர நிலையை துரிதமாக திறம்பட எதிர்கொள்ளும்படி உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையொட்டி டெல்லி அரசு ஏற்கெனவே 10 மற்றும் 12 -ம் வகுப்பு தவிர மற்ற மாணவர்கள் அனைவருக்கும் நேரடி வகுப்புகளை நடத்த தடைவிதித்துள்ளது. மேலும், அவர்களுக்கான வகுப்பு ஆன்லைனில் நடைபெற்று வருகிறது.