என்னை தோளோடு தோளாக அணைத்துக் கொண்ட இளஞ்சூரியன்- உதயநிதிக்கு செந்தில் பாலாஜி நன்றி
என்னை தோளோடு தோளாக அணைத்துக் கொண்ட இளஞ்சூரியனுக்கு வாழ்நாளுக்கும் கடமைப்பட்டிருக்கிறேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு செந்தில் பாலாஜி நன்றி தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் கடந்தாண்டு ஜூன் மாதம் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். ஓராண்டுக்கும் மேலாக சிறையில் இருந்து வந்த செந்தில் பாலாஜி, கடந்த மார்ச் மாதம் ஜாமீன் வழங்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கின் இறுதி விசாரணை ஆகஸ்ட் 12ம் தேதி முடிவடைந்த நிலையில், நேற்று செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர், 471 நாட்களுக்குப் பிறகு நேற்று மாலை வெளியே வந்தார். இன்று அமைச்சர் உதயநிதியை செந்தில் பாலாஜி நேரில் சந்தித்து பேசினார்.
இதுகுறித்து செந்தில் பாலாஜி தனது ட்விட்டர் பக்கத்தில், “காலமெல்லாம் நிலைத்திருக்கும் கருப்பு சிவப்பின் எதிர்காலம்.. தமிழ் கூறு நல்லுலகின் நம்பிக்கை.. தமிழர்களின் நம்பிக்கை... என்னை தோளோடு தோளாக அணைத்துக் கொண்ட இளஞ்சூரியனுக்கு
வாழ்நாளுக்கும் கடமைப்பட்டிருக்கிறேன்..” எனக் குறிப்பிட்டுள்ளார்.