“24 மணி நேரத்தில் 20 மணி நேரம் முதல்வர் மக்களுக்காகவே உழைக்கிறார்”- செந்தில் பாலாஜி
தமிழ்நாடு முழுவதும் மக்களுக்கு சிறு இன்னல்கள் என்றால் கூட நேரில் சென்று களத்தில் நின்று தேவைகளை பூர்த்தி செய்கின்ற முதல்வர், துணை முதல்வரை பெற்று இருக்கிறோம் என அமைச்சர் செந்தில் பாலாஜி பெருமிதம் தெரிவித்த்ள்ளார்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தளவாபாளையம் கிராமத்தில் பொதுமக்களை சந்தித்து மனுக்களை பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன், சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ உள்ளிட்ட அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். அப்போது, அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டனர். பின்னர் காலனி பகுதியில் உள்ள பொது மக்களின் வீடுகளை நேரில் சென்று பார்வையிட்டனர்.
அப்போது பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, “தமிழகத்திலேயே முதல் இடமாக அரவக்குறிச்சி சட்டமன்றத்திற்கு உட்பட்ட தளவாபாளையத்தில் மனு பெறும் நிகழ்ச்சியை தொடங்கி இருக்கிறோம். இது மக்களுக்கான அரசு, மக்களுக்கான முதல்வர், 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் மக்களுக்காகவே உழைக்கின்றார். தமிழ்நாடு முழுவதுவம் மக்களுக்கு சிறு இன்னல்கள் என்றால் கூட நேரில் சென்று களத்தில் நின்று தேவைகளை பூர்த்தி செய்கின்ற முதல்வர், துணை முதல்வரை பெற்று இருக்கிறோம். அரவக்குறிச்சி தொகுதிக்கு 2 கோடி மதிப்பீட்டில் 3 சமுதாய கூடங்கள் ஆதி திராவிடர் நலத்துறையின் மூலமாக ஒப்புதல் அளித்துள்ளார். இப்பகுதிக்கு வந்திருக்கின்ற தாய்மார்கள், பெரியவர்கள், இளைஞர்கள் அனைவரும் ஒன்றுபட்டு முதல்வருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றார். நீங்கள் கொடுக்கும் மனுக்கள் காகிதங்கள் அல்ல, அரசு உத்தரவுகள் என்று கவனத்தில் கொள்ளுங்கள், நிச்சயம் அதற்கான உத்தரவுகளை வழங்குவோம்” என்றார்.