471 நாட்கள் சிறைவாசம் நிறைவு- செந்தில் பாலாஜி ரிலீஸ்

 
அ

புழல் சிறையில் இருந்து முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியே வந்தார்.

சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு 471 நாட்கள் சிறைவாசம் அனுபவித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு  உச்ச நீதிமன்றம்,  நிபந்தனை ஜாமின் வழங்கி இன்று காலை உத்தரவு பிறப்பித்தது. உச்ச நீதிமன்ற உத்தரவு நகலுடன், தலா 25 லட்ச ரூபாய்க்கான  பிணை உத்தரவாதங்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. 

ஆனால் பிணை உத்தரவாதத்தை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவில் குறிப்பிடாததால் குழப்பம் உள்ளதாக தெரிவித்த முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், இதுகுறித்து அமலாக்கத்துறை வழக்கறிஞரை அழைத்து விளக்கம் கேட்டார். பிணை உத்தரவாதத்தை முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏற்பதில் எந்த ஆட்சேபமும் இல்லை என அமலாக்கத்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது அடுத்து, செந்தில்பாலாஜியின்  உறவினர்கள் சிவப்பிரகாசம் மற்றும் தியாகராஜன் ஆகியோர் தாக்கல் செய்த பிணை உத்தரவாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி செந்தில் பாலாஜியை விடுவிக்க உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து புழல் சிறையிலிருந்து செந்தில் பாலாஜி வெளியே வந்தார். அவருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.