மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளர் சண்முகத்திற்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சண்முகத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ் மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சண்முகத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மனதார வாழ்த்துகிறேன். மாணவர் பருவம் முதல் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்து செயல்பட்டவர். பாதிக்கப்பட்ட விவசாயப் பெருங்குடி மக்கள், மலைவாழ் பழங்குடி மக்களின் உரிமைகளுக்காக போராடியவர். தருமபுரி மாவட்டம் வாச்சாத்தி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பழங்குடியின மக்களுக்காக நீண்ட சட்டப் போராட்டத்தை நடத்தி நீதியை பெற்றுத்தந்தவர்.
புதிதாக தலைமைப் பொறுப்புக்கு வந்துள்ள திரு பெ.சண்முகம் அவர்களின் இயக்கப் பணிகளின் மூலம் தமிழகத்தில் இந்தியா கூட்டணி மேலும் வலிமை பெறும். இதுவரை பொறுப்பு வகித்து வந்த திரு கே. பாலகிருஷ்ணன் அவர்கள் தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வலிமை பெற செயல்பட்டவர். தேர்தல் களத்தில் இந்தியா கூட்டணி வெற்றிபெற கடுமையான பங்களிப்பை அளித்தவர். அவருக்கும் எனது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.