ஈரோடு கிழக்கு தொகுதியை திமுக எங்களிடம் இருந்து பறிக்காது- செல்வப்பெருந்தகை
ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் தொகுதிதான், அதனை திமுக எங்களிடம் இருந்து பறிக்காது என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நம்பிக்கை தெரிவித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் சீரமைப்பு, மாற்றி அமைக்கும் பணி நடக்கிறது. தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுக்கான பொறுப்புகளுக்கு இன்று முதல் இணையதளம் மூலமாக விட்டம் பெறப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் 15 தினங்களுக்குள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இணையதள முகவரிக்கு விருப்பமனுவை அளிக்கலாம். அதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டு பரிசீலனை செய்து, அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு பரிந்துரை செய்ய இருக்கிறோம்.
பொங்கல் திருநாளில் ஒவ்வொரு ஆண்டும் ரேசன் அட்டை காரர்களுக்கு தமிழக அரசு பணம் கொடுப்பார்கள். அதன்படி இந்த ஆண்டும் குறைந்தபட்சம் அரசு 1,000 ரூபாய் வழங்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அரசியலாக்கப்படுகிறது. தற்போது, இந்த வழக்கை சிறப்பு குற்றப்புலனாய்வு குழு விசாரிக்கிறது. மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியின் செல்போன் கிடைத்துள்ளது. அந்த செல்போனை ஆய்வு செய்தாலே, "யார் அந்த சார்" என்று தெரிந்துவிடும். எந்த சார் ஆக இருந்தாலும் அவர் மாட்டி கொள்வார். ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் தான் தொலைத்தொடர்பு ஆணையம் இருக்கிறது. ஜனநாயக ரீதியான போராட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் கருத்து.
அதானிக்கு எதிரான போராட்டத்தின் போது காங்கிரஸ் கட்சியினரும் கைது செய்யப்பட்டு, எவ்வித வசதியும் இல்லாத இடத்தில்தான் அடைத்து வைக்கப்படிருந்தனர். ஆனால், அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தை பா.ஜ.க., அ.தி.மு.க. அரசியலாக்குகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியை தி.மு.க எங்களிடம் இருந்து பறிக்காது. அது இயற்கையாகவே காங்கிரஸ் தொகுதி தான். கும்பகோணத்தில் தி.மு.க கவுன்சிலருக்கும், காங்கிரஸ் மேயருக்கும் இடையே நடந்த பிரச்சினை குறித்து மேயர் சரவணனிடம், நாடாளுமன்ற உறுப்பினர், மாவட்ட தலைவர்கள் முன்னிலையில் இன்று விசாரிக்க உள்ளோம்” என்றார்.