டங்ஸ்டன் ஏலம் ரத்து- மதுரை மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி: சீமான்

டங்ஸ்டன் ஏலம் மதுரை மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியே தவிர வேறொன்றுமில்லை என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
மதுரை மாவட்டம், மேலூர் பகுதியில் காவட்டைப்பட்டி, எட்டிமங்கலம், ஏ வெள்ளாளப்பட்டி, அரிட்டாபட்டி, கிடாரைப்பட்டி, நரசிங்கம்பட்டி, நாய்க்கர்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் வேதாந்தா குழும நிறுவனத்தின் ஹிந்துஸ்தான் ஜிங் லிமிட்டெட் கம்பெனிக்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஏலம் கொடுக்கும் அறிவிப்பை வெளியிட்டது. சுமார் 5000 ஏக்கர் பரப்பளவில் அமையும் டங்ஸ்டன் சுரங்கத்தால் கடுமையான பாதிப்புகள் ஏற்படும் என்பதால் இந்தப் பகுதி மக்கள், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசு சுரங்கம் அமைக்க அனுமதி தராது என்பதை தெளிவுபடுத்தி, அத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதுடன், கடந்த 2024 டிசம்பர் 9 ஆம் தேதி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. இதையடுத்து ஒன்றிய அரசு மேலூர் பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வெளியிட்டிருந்த ஏல அறிவிப்பை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “மதுரை அரிட்டாப்பட்டியில் மேற்கொள்ளப்படவிருந்த டங்ஸ்டன் சுரங்கத்திட்டம் கைவிடப்படுவது, முழுக்க முழுக்க தன்னெழுச்சியாக போராடிய மதுரை மக்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியே தவிர வேறொன்றுமில்லை. மண்ணைக் காக்க தீரத்துடன் ஓரணியில் திரண்டு பேரெழுச்சியாக அறப்போர் புரிந்த மதுரை மக்களுக்கு என்னுடைய புரட்சிகர வாழ்த்துகள்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.