பெரம்பலூர் புதிய பேருந்து நிலைய வாயிலில் கருணாநிதி சிலை நிறுவுவதை கைவிடுக- சீமான்

 
seeman

பெரம்பலூர் புதிய பேருந்து நிலைய வாயிலில் நிறுவப்பட்டிருந்த உழவர் உரிமைப்போராளி ஐயா நாராயணசாமி நாயுடுவின் சிலையை அகற்றும் முடிவை கைவிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

seeman

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரம்பலூர் புதிய பேருந்துநிலையம் நுழைவு வாயிலில் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக  நிறுவப்பட்டிருந்த  உழவர் உரிமைப்போராளி பெருமதிப்பிற்குரிய ஐயா நாராயணசாமி நாயுடு அவர்களின் திருவுருவச் சிலையை பொய்க்காரணங்களை கூறி அகற்றிவிட்டு, அதே இடத்தில் முன்னாள் முதல்வர் ஐயா கருணாநிதி அவர்களின் சிலையை நிறுவ திமுக அரசு முயல்வது வன்மையான கண்டனத்துக்குரியது. உழவர்கள் தனித்திருந்தால்  தங்கள் கோரிக்கைகளை வென்றெடுக்க முடியாது என்பதை உணர்ந்து, வேளாண் பெருங்குடி மக்களை  ஒன்றிணைத்து உழவர் இயக்கங்களை கட்டமைத்த பெருமகன் ஐயா  நாராயணசாமி அவர்கள். அவரது அயராத முயற்சியால் தமிழ்நாடு மட்டுமின்றி,  கர்நாடகாவில் பேராசிரியர் நஞ்சுண்ட சாமி தலைமையிலும், ஆந்திராவில் சங்கர் ரெட்டி தலைமையிலும், மராட்டியத்தில் சரத் ஜோசி தலைமையிலும், உத்தரப்பிரதேசத்தில் மகேந்திர சிங் திகாயத் தலைமையிலும் மாநில உழவர் இயக்கங்கள் உருவாகின. வேளாண்மைக்கு இலவச மின்சாரம், வேளாண்  கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு உழவர் உரிமைப்போராட்டங்களை முன்னின்று நடத்தி, அதற்காக சிறை தண்டனையும் பெற்ற ஐயா நாராயணசாமி அவர்கள், உழவினை ஒரு தொழிலாக அரசு அறிவிக்க வேண்டுமென்றும் கனவு கண்டவர்.

அத்தகைய பெருமைக்குரிய ஐயா நாராயணசாமி நாயுடு அவர்களின் திருவுருவச்சிலையை ஆளும் கட்சியின் அழுத்தத்தால் பெரம்பலூர் பேருந்து நிலைய வாயிலிருந்து அகற்றிவிட்டு, அதே இடத்தில் திமுகவின் முன்னாள்  தலைவர் ஐயா கருணாநிதி அவர்களின்  சிலையை அமைத்திட முயல்வது அப்பட்டமான அடையாள அழிப்பாகும். திமுக அரசின் இத்தகைய எதேச்சதிகார முடிவிற்கு எதிராக பல்வேறு உழவர் அமைப்புகளும், வேளாண் சங்கங்களும் ஒன்றிணைந்து நீதிமன்றத்தில் தொடுத்துள்ள சட்டப்போராட்டத்திற்கும், முன்னெடுக்கவுள்ள அறப்போராட்டங்களுக்கும் நாம் தமிழர் கட்சி தம்முடைய முழுமையான ஆதரவை அளித்து கோரிக்கை வெல்ல துணைநிற்கும்  என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஆகவே, தமிழ்நாடு அரசு பெரம்பலூர் புதிய பேருந்து நிலைய வாயிலில் ஐயா கருணாநிதி அவர்களின் சிலையை நிறுவும் முடிவை கைவிட்டு, உழவர் அமைப்புகள் மற்றும் சங்கங்களின் கோரிக்கையை  ஏற்று, ஏற்கனவே  நிறுவப்பட்டிருந்த உழவர் உரிமைப்போராளி ஐயா நாராயணசாமி நாயுடுவின் சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவ வேண்டுமென வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.