தமிழர்களுக்கு வேலை தர மறுக்கும் நிறுவனங்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைத்து வருவது ஏன்?- சீமான்
தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு தர மறுக்கும் தனியார் நிறுவனங்களை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய அழைத்து வருவது ஏன்? என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஓசூரில் இயங்கும் டாடா மின்னணு நிறுவனம், தொழிற்சாலையில் பணியாற்ற உத்திரகண்ட் மாநிலத்திலிருந்து 4000 பெண்களை அழைத்து வரவிருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இதே நிறுவனம் பணித்தேவைக்காகச் சிறப்பு ரயில் மூலம் 800 இளம்பெண்களை ஜார்க்கண்டிலிருந்து அழைத்துவந்தபோதே கடும் எதிர்ப்பினை தெரிவித்த பிறகும் மீண்டும் மீண்டும் வெளி மாநிலங்களிலிருந்து ஆட்களைப் பணியமர்த்தி, தமிழர்களின் வேலைவாய்ப்பினைத் தட்டிப்பறிப்பது என்பது வன்மையான கண்டனத்திற்குரியது. ஐம்பதாண்டுகளாக தமிழ்நாட்டை மாறிமாறி ஆண்ட இரு திராவிடக் கட்சிகளின் அரசுகளும் பன்னாட்டுக் கூட்டிணைவு நிறுவனங்கள் மூலமே வேலைவாய்ப்பு பெருகும், மக்களின் வறுமை நீங்கும், தமிழ்நாடு அபார வளர்ச்சியடையும் என்று மக்களை நம்பவைத்து, போட்டிப்போட்டு தனியார் பெருமுதலாளிகளைச் சிவப்புக் கம்பளம் விரித்து அழைத்துவந்து அதையே பெரும் சாதனையாகவும் விளம்பரம் செய்து வருகின்றன.
அதுமட்டுமின்றிப் பல்லாயிரம் கோடிகள் வரிச்சலுகை, குறைந்த விலையில் நிலம், நீர், மின்சாரம், மனிதவளம் என யாவும் அளித்துச் சொந்த நாட்டுத் தொழில் முனைவோரையும், உள்ளூர் சிறுகுறு நிறுவனங்களையும் மொத்தமாக அழித்து முடித்தன. ஆனால், அவ்வாறு நிறுவப்பட்ட தனியார் நிறுவனங்கள் அடிமாட்டு விலைக்கு மக்களின் உழைப்பினை உறிஞ்சி அடிமைகள் போலவே பயன்படுத்துகின்றன. தமிழ் மக்களின் உழைப்பினையும், தமிழ் நிலத்தின் வளங்களையும் சுரண்டி தங்களை வளப்படுத்திக்கொண்ட பிறகு திடீரென நிறுவனத்தை மொத்தமாக மூடிவிட்டு அங்குப் பணிபுரியும் ஊழியர்களை நட்டாற்றில் விட்டுச் செல்கின்றன. இதனால் வேலைவாய்ப்பும் இழந்து, வேறு வேலைக்கும் செல்ல முடியாமல் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கி வறுமையில் வாடும் நிலைக்கு தமிழர்கள் தள்ளப்படுகின்றனர்.
இந்தியப் பெருநிறுவனங்களை முதலீடு செய்ய அழைத்ததுபோக, தற்போது நோக்கியா உள்ளிட்ட வெளிநாட்டு நிறுவனங்களை முதலீடு செய்ய அழைத்து வருவதற்காக அமெரிக்கா சென்றுள்ளார் முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள். ஆனால், அதே நோக்கியா நிறுவனம் கடந்த திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் தொடங்கிய தனது தொழிற்சாலையைப் பாதியில் மூடிவிட்டு அங்குப் பணியாற்றிய ஊழியர்களை வாழ்வாதாரமின்றித் தவிக்கவிட்டுச் சென்றதற்கு முதல்வர் என்ன பதில் கூறப்போகிறார்? ஆனால், தற்போது இதுபோன்ற நிரந்தரமற்ற பணிகளிலும் தமிழர் அல்லாத வடவர்களையே முழுக்க முழுக்கத் தனியார் நிறுவனங்கள் பணியமர்த்தும்போக்கு அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக மேற்கு மாவட்டங்களில் கடந்த சில ஆண்டுகளில் வேலைவாய்ப்புகளுக்காகக் குடியேறிய வடவர்களின் எண்ணிக்கை மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமாகும். சென்னை, கோவை, உள்ளிட்ட மாநகரங்கள், திருப்பூர், ஓசூர் உள்ளிட்ட தொழில் நகரங்கள் மட்டுமின்றித் தமிழ்நாட்டின் கிராமங்கள் வரை வடவர்களையே பணியமர்த்தும்போக்கு அதிகரித்து வருகிறது.
அவ்வாறு தமிழ்நாட்டிற்கு வரும் பிறமாநிலத்தவர் விரைவாக குடும்ப அட்டை, இருப்பிடச்சான்று பெற்று நிரந்தரமாகக் குடியேறுகின்றனர். மேலும், வாக்காளர் அட்டையும் பெறுவதால் தமிழ்நாட்டின் அரசியலைத் தீர்மானிக்கும் ஆற்றலாகவும் வடவர்கள் உருவெடுத்து வருகின்றனர். இதனால் தமிழர்களின் வேலைவாய்ப்பு, பொருளாதாரம் யாவும் பறிக்கப்படுவதோடு மட்டுமின்றி எஞ்சியுள்ள அரசியல் அதிகாரத்தையும் வடவர்களிடம் முற்றாக இழந்து, தமிழர்கள் தங்கள் சொந்த நிலத்திலேயே உடைமைகள், உரிமைகளற்ற அகதிகளாக, அடிமைகளாக வாழும் அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மேலும், தமிழ்நாட்டில் குடியேறும் வடவர்களால் நாளுக்குநாள் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட கொடுங்குற்றச் செயல்களும் அதிகரித்து அதனால் சட்டம் – ஒழுங்கும் மிகமோசமான நிலையை எட்டியுள்ளது. அதுமட்டுமின்றி, உழைப்புக்கேற்ற குறைந்தபட்ச அடிப்படை ஊதியம் என்பதையும் தகர்த்து, மிகக்குறைந்த ஊதியத்திற்கு வடவர்கள் பணிபுரிய முன்வருவதால் தமிழகத் தொழிலாளர்கள் போராடிப்பெற்ற உரிமையும் பறிபோய் வர்க்கப்பாகுபாட்டில் 20 ஆண்டுகள் தமிழ்நாடு பின்னோக்கி செல்லும் இழிநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்தி மொழி ஆதிக்கத்தைத் தீவிரமாக எதிர்க்கும் வீரமிகு தமிழ்மண், திட்டமிட்டுக் குடியேற்றப்படும் இந்தி மொழியினரின் ஆதிக்கத்தை எதிர்க்க முடியாமல் தடுமாறுவது வரலாற்றுப் பெருந்துயராகும்.
ஒவ்வொரு நாளும் பல்லாயிரக் கணக்கில் வடவர்கள் குடியேறி தமிழர்களின் வேலைவாய்ப்பினைப் பறிக்கும் நிலையில் அதனைத் தடுக்கத்தவறி வேடிக்கை பார்ப்பதற்குப் பெயர்தான் திராவிட மாடலா?
தமிழ்நாட்டில் குடியேறும் வடவர்கள் குறித்துத் தமிழ்நாடு அரசிடம் என்ன தரவுகள் உள்ளது?
தனியார் நிறுவனங்கள் வடவர்களைப் பணியமர்த்தும் போக்கினைக் கட்டுப்படுத்த திமுக அரசு என்ன திட்டம் வைத்துள்ளது?
தமிழ்நாட்டிற்கு வரும் பிறமாநிலத்தவருக்கு உள்நுழைவுச்சீட்டினை திமுக அரசு இதுவரை நடைமுறைப்படுத்த எந்த முயற்சியும் எடுக்காதது ஏன்?
தமிழ்நாட்டில் இயங்கும் தனியார் நிறுவனங்கள் வேலைவாய்ப்பில் தமிழருக்கே முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற நாம் தமிழர் கட்சியின் நெடுநாள் கோரிக்கையைத் தமிழ்நாடு அரசு சட்டமாக்கப்போவது எப்போது?
தமிழருக்கு வேலைவாய்ப்பளிக்காத தனியார் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதால் தமிழருக்கு என்ன பயன்? என்ற கேள்விகளுக்கெல்லாம் திமுக அரசு என்ன பதில் கூறப்போகிறது?
பல்லாயிரம் கோடி தனியார் அந்நிய முதலீடு, பல இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது என்றெல்லாம் வாய் வார்த்தைகளால் கவர்ச்சி விளம்பரங்கள் செய்வதைக் கைவிட்டு திமுக ஆட்சிக்கு வந்தது முதல் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட தனியார் நிறுவனங்களால் வேலைவாய்ப்பினைப் பெற்ற தமிழ் மக்களின் பெயர் பட்டியலை திமுக அரசு உடனடியாக வெளியிட வேண்டும். ஆகவே, தமிழ்நாட்டில் தொடங்கப்படும் தனியார் நிறுவனங்கள் தமிழர்களுக்கே வேலைவாய்ப்பினைத் தர உடனடியாகத் தனிச்சட்டமியற்ற வேண்டுமென தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இனியாவது, தமிழ்நாட்டில் குடியேறும் பிறமாநிலத்தவரைக் கட்டுப்படுத்த உள்நுழைவுச் சீட்டினை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினைக் கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.