செவிலியரை மிரட்டிய வழக்கு: விருதுநகர் எஸ்.பி.யிடம் விளக்கம் கேட்டு எஸ்சி-எஸ்டி ஆணையம் நோட்டீஸ்

 
case

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மருத்துவரை மிரட்டியதாக செவிலியர் மற்றும் அவரது பெற்றோர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக எஸ்.பி.யிடம் விளக்கம் கேட்டு தேசிய பட்டியலினத்தோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் 23 வயது இளம் பெண் ஒருவர் செவிலியராகப் பணியாற்றி வந்தார். கடந்த 2023, செப்.9 அன்று அப்பெண் செவிலியரை மருத்துவர் ரகுவீர் என்பவர் பாலியல் சீண்டல் செய்ததாக புகார் எழுந்தது. இதுகுறித்து சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் செவிலியர் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப் பதிந்து மருத்துவர் ரகுவீரை கைதுசெய்தனர். விருதுநகர் மாவட்ட வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு மருத்துவர் ரகுவீர் ஜாமீனில் வெளிவந்தார்.

அதையடுத்து, பாதிக்கப்பட்ட செவிலியர், அவரது தாய், தந்தை ஆகியோர் தன்னை தாக்கியதாக விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மருத்துவர் ரகுவீர் புகார் அளித்தார். அதில், மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த குழந்தைகளை சுகாதாரமின்றி செவிலியர் தொட்டதாகவும், மருத்துவ விதிகளுக்கு புறம்பாக அசட்டையான முறையில் நடந்து கொண்டதாகவும் புகார் அளித்தார்.ncsc


மேலும், இதனால் ஆத்திரமடைந்து செவிலியரை வெளியே போகச் சொன்னதாகவும், வேலைக்கு வர வேண்டாம் என்று கூறியதாகவும், பின்னர், செவிலியரின் தாய், தந்தை ஆகியோர் வந்து தன்னைத் தாக்கியதாகவும் புகார் அளித்தார். இதுதொடர்பாக, கடந்த 2024 மார்ச் 13 அன்று சாத்தூரில் உள்ள 2-வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் சாத்தூர் நகர் போலீஸார் செவிலியர் மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதுதொடர்பாக, முறையாக விசாரணை செய்து மிரட்டும் நோக்கில் தன் மீது பொய் புகார் அளித்துள்ள ரகுவீர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யக்கோரியும், தன் மீதும், பெற்றோர் மீதும் சாத்தூர் நகர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரியும் பாதிக்கப்பட்ட செவிலியர் தேசிய பட்டியலினத்தோர் ஆணைய இயக்குநருக்கு மனு அனுப்பினார். இந்நிலையில், செவிலியர் மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து 15 நாட்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தின் இயக்குநர் ரவிவர்மன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.