ஓடும் ரயிலில் அட்டகாசம் செய்த பள்ளி மாணவியை நேரில் அழைத்த காவல் கண்காணிப்பாளர்

 
police

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில்நிலையத்தில் ஓடும் ரயிலில் சாகசம் செய்த பள்ளி மாணவர்களின் பெற்றோர்களை அழைத்து திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் அறிவுரை வழங்கி எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை ரயில்நிலையத்தில் பள்ளி மாணவன் மற்றும் மாணவி ஓடும் ரயிலில் அபாயகரமாக ஏறியும்,  நடைமேடையில் கால்களை தேய்த்தபடி சாகசம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியதைத் தொடர்ந்து. ஆபத்தை உணராமல் சாகசம் செய்த பள்ளி மாணவர்களை அவர்களின் பெற்றோர்களுடன் ஆஜராக வேண்ட திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் உத்தரவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து கும்மிடிப்பூண்டி பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது ஆண் மாணவரையும், பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் 17 வயது பெண் மாணவியையும் கண்டறிந்து அவர்கள் பெற்றோர்களுடன் காவல்துறையினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று ஆஜர்படுத்தினார்கள். சம்மந்தப்பட்ட அந்த மாணவரையும், அந்த மாணவியின் பெற்றோர்களுக்கும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அறிவுரை வழங்கி வழியனுப்பி வைத்தார் . மேலும், அவர்களின் எதிர்கால கனவு குறித்து மாவட்ட கண்காணிப்பாளரிடம் பேசிய அந்த மாணவர் தான் ஒரு போலீஸ் டிஎஸ்பி ஆகப்போவதாகவும், அந்த மாணவி தான் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாகபோவதாகவும் தெரிவித்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் ஓடும் பேருந்து மற்றும் ரயில் அபாயகரமாக பயணம் செய்வது தெரிய வந்தால் அதை குறித்து புகைப்படங்கள்  மற்றும் வீடியோக்கள் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பு அதிகாரியின் பிரத்யேக தொலைபேசி எண்ணில் ( 6379904848)
புகார் தெரிவிக்கலாம் என்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார்.