நிபா வைரஸ் எதிரொலி- புதுச்சேரியில் பள்ளிகளுக்கு ஒரு வாரம் விடுமுறை
நிபா வைரஸ் பரவல் எதிரொலி காரணமாக, புதுச்சேரி பிராந்தியம் மாகேயில் ஒரு வாரம் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. கேரளா மாநிலம் கோழிக்கோடு அருகே புதுவை மாநிலத்தின் மாகே பிராந்தியம் உள்ளது. கோழிக்கோடு பிராந்தியத்தில் நிபா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இதையடுத்து புதுவையின் மாகே பிராந்திய எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. புதுவை எல்லைக்குள் நுழைபவர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை நடத்தப்படுகிறது. பஸ், ரெயில் பயணிகள் கண்காணிக்கப்படுகின்றனர். ஏற்கனவே மாகேவில் 2 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நிபா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் மாகேயில் மேலும் ஒரு வாரத்துக்கு பள்ளி, கல்லூகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாகே மண்டல நிர்வாக அதிகாரி சிவராஜ் மீனா வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாகேவில் நிபா வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை ந டவடிக்கையாக நாளை 18ந் தேதி முதல் 24ந் தேதி வரை பள்ளி, கல்லூரிகளை மூட வேண்டும். இந்த காலத்தில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்த வேண்டும். அங்கன்வாடிகள், மதரசாக்கள், டியூசன் சென்டர்களையும் ஒரு வாரம் மூட வேண்டும். மாகே உள் விளையாட்டு அரங்கம் மூடப்படுகிறது. மக்கள் கூடும் பொது இடங்களான மார்க்கெட், வணிக வளாகங்களில் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிய வேண்டும். இதை வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். இதை மீறுவோர் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்து உள்ளார்.