மணல் கடத்தல் - எத்தனை பேர் குண்டாஸில் கைது? ஐகோர்ட் கேள்வி
மணல் கடத்தல் வழக்குகள் தொடர்பாக, இதுவரை எத்தனை பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என அறிக்கை தாக்கல் செய்ய, அரசுத்தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரேசன் கடையில் விற்கப்படும் 7,200 கிலோ அரிசியை கர்நாடகாவிற்கு கள்ளச் சந்தையில் விற்க முயன்றதாக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கிருஷ்ணகிரியை சேர்ந்த சத்தியமூர்த்தி கைது செய்யப்பட்டார். இதனையடுத்து அவரை குண்டர் சட்டத்தில் அடைக்க மே மாதம் சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி சத்தியமூர்த்தியின் மனைவி பூஞ்சோலை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில் விசாராணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கணவர் அரசு குடோனில் இருந்து ரேசன் அரிசியை கடத்தியிருந்தால் அவர் மீது குண்டர் சட்டம் போட்டிருக்கலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர். தேவைப்படாத நபர்களுக்கு ரேசன் கடை அரிசியை விற்கக்கூடாது என தெரிவித்த நீதிபதிகள் இது போன்ற செயல்களுக்காக குண்டர் சட்டம் போடக்கூடாது என்றும் அறிவுறுத்தினர்.
இதனையடுத்து, சத்திய மூர்த்தி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனிடையே, மணல் கடத்தல் வழக்குகளில் எத்தனை பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுத்தரப்புக்கு உத்தரவிட்டனர்.