சனாதன வழக்கு- உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு
சனாதன வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையில் நடந்த சனாதன எதிர்ப்பு மாநாட்டில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்திற்கு எதிராக தனது கருத்துக்களை பதிவு செய்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இதுவரை 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த எட்டு வழக்குகளும் வேறு வேறு மாநிலங்களில் தொடரப்பட்டுள்ளதால் இவை அனைத்தையும் ஒன்றாக இணைப்பு ஒரே இடத்தில் விசாரிக்க உத்தரவிடக்கோரி உதயநிதி சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக மகாராஷ்டிரா, பீகார், கர்நாடகா, காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் தனக்கு எதிராக பதியப்பட்டுள்ள வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், நவம்பர் 18ஆம் தேதிக்கு முன் பதில் அளிக்குமாறு மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் விசாரணைக்கு அனுமதிக்க முடியாது, வேறு மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் தான் அனுமதிக்க முடியும் என கருத்து தெரிவித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், சனாதன வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளித்து உத்தரவு பிறப்பித்தனர்.