முன்னாள் அமைச்சருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன்

 
ச்

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் சம்மன் அனுப்பி இருக்கிறது.   நடிகை சாந்தினி வழக்கில் நீதிமன்றம் இந்த சம்மனை அனுப்பியிருக்கிறது.  

 திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னை ஏமாற்றியதாகவும்,  கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ததாகவும்,  அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டியதாகவும் நடிகை சாந்தினி கடந்த மே மாதத்தில் முன்னாள் அதிமுக அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக பரபரப்பு புகார்களை எழுப்பியிருந்தார்.

ப்

 சாந்தினியின் இந்த புகாரை அடுத்து சென்னை அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவானது.  இந்த வழக்கில், முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார்.  இதன் பின்னர் அவர் உயர்நீதிமன்றத்தில் நிபந்தனை ஜாமீன் பெற்றார்.  

 இதற்கிடையில் காவல்நிலையத்தில் பதிவான வழக்கில் சென்னை சைதாப்பேட்டை 9வது பெரு நகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மணிகண்டனுக்கு எதிராக 347 பக்க குற்றப்பத்திரிகையை காவல் துறை தாக்கல் செய்துள்ளது.

 இது தொடர்பான வழக்கு விசாரணை,   நீதிபதி மோகனாம்பாள் முன்பு வந்தபோது ,   ஜனவரி 4ஆம் தேதியன்று வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.   மேலும் வழக்கு விசாரணையை ஜனவரி 4ம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்.