விஜய் கட்சி ஓரிரு அமாவாசைகளுக்கு மட்டுமே தாக்குப்பிடிக்கும்- ஆர்.எஸ்.பாரதி
யார் கட்சி ஆரம்பித்தாலும் கவலையில்லை, அவை அனைத்தும் ஓரிரு அமாவாசைகளுக்கு மட்டுமே தாங்கும் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
நாகையில் உள்ள தனியார் திருமண அரங்கில் திராவிட முன்னேற்ற கழகத்தின் கட்சியில் இணையும் விழா இன்று நடைபெற்றது. திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கெளதமன் ஆகியோர் தலைமையில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் திமுகவில் இணைந்தனர். குறிப்பாக நாகை மாவட்டத்தில் உள்ள பல்வேறு மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவ பெண்கள், இளைஞர்கள் தாரைதப்பட்டைகள் முழங்க சாரைசாரையாக பேரணியாக வந்து திமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர். புஷ்பவனம், வெல்லப்பள்ளம், வானவன் மகாதேவி, விலுந்தமாவடி, காமேஷ்வரம், செருதூர், கல்லார், அக்கரைப்பேட்டை உள்ளிட்ட 14 மீனவ கிராமங்களை சேர்ந்த 1610 நபர்கள் அதிமுக, பாஜக, நாம் தமிழர், தமிழக வெற்றி கழகம், உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில் பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்தவரை அப்போதைய மீனவர்களின் வேறு, தற்போதுள்ள மீனவர்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து வருகின்றனர். மீனவர்களும், மீனவ இளைஞர்களும், மாணவர்களும் திமுக மீது நம்பிக்கையுடன், ஆதரவுடனும் உள்ளனர். யார் கட்சி ஆரம்பித்தாலும் கவலையில்லை. அவை ஓரிரு அமாவாசைகளுக்கு மட்டுமே தாங்கும். கட்சி ஆரம்பிக்கவர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர் ஆகிவிடமுடியாது” என்றார்.