கார் டிக்கியை திறந்தால் ரூ.13 லட்சம் பணம்- சிக்கிய கோவை பெண் சார்பதிவாளர்

 
கார் டிக்கியை திறந்தால் ரூ.13 லட்சம் பணம்- சிக்கிய கோவை பெண் சார்பதிவாளர்

கோவை சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் அசல் ஆவணங்களைப் பெற ரூ.35 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சார்பதிவாளர் ( பொறுப்பு ) மற்றும் இளநிலை உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீஸ் சார் கைது செய்தனர்.

சிங்காநல்லூர் சார்பதிவாளர் அலுவலகம்

கோவை சித்தாபுதூர் தனலட்சுமி நகரைச் சேர்ந்தவர் சென்னியப்பன் மகன் கருப்பசாமி. இவர் சிங்காநல்லூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் தனது அசல் ஆவணங்களைப் பெறச் சார் பதிவாளர் ( பொறுப்பு ) நான்சி நித்தியா கரோலினை அணுகியுள்ளார். அப்போது அவர் இளநிலை உதவியாளர் பூபதிராஜாவை அழைத்து அதனைச் சரி பார்த்துக் கொடுக்க அறிவுறுத்தியதோடு,  அதற்காகப் பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.  இதையடுத்து இளநிலை உதவியாளர் பூபதிராஜா அசல் ஆவணங்களைப் பெற ரூ.35 ஆயிரம் கொடுக்க வேண்டும் எனக் கருப்பசாமியிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து கருப்புசாமி கோவை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு போலீசில்  புகார் அளித்தார். புகார்  அடிப்படையில் கருப்பசாமியிடம் ரசாயனம் தடவிய ரூ.35 ஆயிரம் பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்து அனுப்பியுள்ளனர்.  அதனை கருப்புசாமி இளநிலை உதவியாளர் பூபதிராஜாவிடம் தனது அசல் ஆவணங்களைப் பெற ரூ.35 ஆயிரம் கொடுத்துள்ளார். 

சார்பதிவாளர் நான்சி

இதனைக் கண்காணித்து வந்த கூடுதல் துணை காவல் கண்காணிப்பாளர் திவ்யா தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் பூபதிராஜா, சார் பதிவாளர் நான்சி நித்யா கரோலினிடம் பணத்தை கொடுத்தபோது இருவரையும் சுற்றி வளைத்து மடக்கிப் பிடித்தனர். பின்னர் அந்த நோட்டுகளை ஆய்வு செய்தபோது அதில் ரசாயனம் தடவி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சார் பதிவாளர் ( பொறுப்பு )  நான்சி நித்யா கரோலின் மற்றும் இளநிலை உதவியாளர் பூபதிராஜா ஆகிய இருவரையும் கைது செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ரூ.35,000 பணத்தைப் பறிமுதல் செய்தனர். பின்னர் சார் பதிவாளர் ( பொறுப்பு )  நான்சி நித்யா கரோலின் வாகனத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையிட்டபோது அதில் கணக்கில் வராத ரூ.13 லட்சம் பணம் கட்டுக்கட்டாக இருந்தது தெரியவந்தது. அதனையும் பறிமுதல் செய்த போலீசார் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.